நமக்கு யாரேனும் வாக்குக் குடுத்து ஏமாற்றினால் , நமது நம்பிக்கையைச் சீர் குலைத்தால் நமக்கு என்ன வரும்? கோபம் வரும்,வெறுப்பு வரும் ,அந்த நபரையே கூட நமக்குப் பிடிக்காமல் போகும்.இதை நாம் மறுக்க முடியாது.
ஆனால் ஒரு நபரின் மேல் மட்டும் நமக்குக் கோபமே வராது.அவர் நம்மை எத்தனை முறை ஏமாற்றினாலும் நாம் அவரை மன்னித்துக் கொண்டே இருப்போம்.இன்னும் சொல்லப் போனால் இனிமேலும் நாம் அவரிடம் ஏமாறுவதற்கு தயாராகவே இருப்போம்.அப்படி ஒரு நபர் யாரென்று யோசிக்கிறீர்களா? சந்தேகமே வேண்டாம் அது நீங்கள் தான்.
என்னது நானா? என்று நீங்கள் யோசித்தால் அது தான் உண்மை.
‘நாளையில் இருந்து இந்த வேலையை ஆரம்பிக்கிறேன்.’
‘அடுத்த வருடத்தில் இருந்து ஜிம் செல்வேன்.’
‘நாளையில் இருந்து தினமும் புத்தகம் வாசிப்பேன்.’
‘நாளையில் இருந்து ஓட்டப்பயிற்சி செய்ய ஆரம்பிப்பேன்’.
‘நாளையில் இருந்து புகைபிடிக்கவே மாட்டேன்.’
‘இனிமேல் போனை அளவுக்கு மேல் பயன்படுத்த மாட்டேன்.’
இப்படி எல்லாம் உங்களுக்கு நீங்கள் போட்டுக் கொண்ட சபதங்கள் இன்னும் எத்தனை எத்தனை நிறைவேற்றாமல் இருக்கிறது என்று யோசியுங்கள்.
இப்படி நீங்கள் சபதம் போட்டு அதை நிறைவேற்றாமல் ஒவ்வொரு முறையும் கடந்து கடந்து அதை உங்களுக்குள் ஒரு பழக்கமாக மாற்றி வைத்திருக்கிறீர்கள்.அதனால் தான் அப்பறம் பார்த்துக் கொள்ளலாம் என்று எளிமையாக தினமும் திரும்பத் திரும்ப அதையே செய்கிறீர்கள்.அது தான் உங்களுக்குப் பழக்கமாகிவிட்டதே.
இது உங்களுக்கு நீங்களே தனிப்பட்ட முறையில் போட்டுக் கொள்வது என்பதால், ‘இதை ஏன் செய்யவில்லை?’என்று யாரும் உங்களை எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள்.
சரி, இதுவே நீங்கள் யாரிடமேனும் உங்கள் இலக்குகளைச் சொல்லிச் செய்யாமல் இருந்தால் அது இன்னும் மோசமாகிவிடும்.உதாரணமாக உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் ‘நாளையில் இருந்து நொறுக்குத் தீனி தின்ன மாட்டேன்,டயட்டில் இருக்கிறேன்’என்று சொல்லி விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
ஆனால் நீங்கள் ஒன்றிரண்டு நாள் கடைபிடித்து விட்டு அதை அப்படியே கண்டு கொள்ளாமல் சகட்டு மேனிக்கு நொறுக்குத் தீனியை உண்ண ஆரம்பிக்கிறீர்கள். என்ன ஆகும்? உங்கள் வீட்டில் இருக்கும் எல்லாரும் ‘நான் தான் சொன்னேன்ல நீ ரெண்டு நாளுக்கு மேல இதெல்லாம் செய்ய மாட்ட’ என்பார்கள்.
இப்படி நமக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளையும் அடுத்தவரிடம் போட்ட சபத்ததையும் மீறுவதன் மூலமாக நாம் என்ன காண்பிக்கிறோம்? நான் எதிலுமே உருப்படி இல்லை.நான் எதையுமே தொடர்ந்து செய்ய மாட்டேன்.இப்படி நம்மைப் பற்றி நாமே எதிர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்கிறோம்.
அவர்களா நம்மைக் கேட்டார்கள்? நாமே ஒன்றைச் சொல்லி அதை நாமே மீறி நம் பெயரை நாமே கெடுத்துக் கொள்கிறோம்.இதையும் ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம் நாம்.
நம்மை நாமே நம்பாத பொழுது உடனிருப்பவர்கள் எப்படி நம்புவார்கள்?முதலில் உங்கள் பேச்சை நீங்கள் கேட்க வேண்டும்.நீங்கள் ஒன்றைச் சொன்னால் அதை செய்து காட்ட வேண்டும்.இல்லையேல் எதுவுமே சொல்லக் கூடாது.
‘நாளையில் இருந்து குறைந்தது பத்துப் பக்கங்களையாவது வாசிக்காமல் தூங்கப் போகமாட்டேன்’ என்ற உறுதிமொழியை நீங்கள் எடுப்பீர்களேயானால் அதை எப்படியாவது நிறைவேற்றுங்கள்.இல்லையேல் அந்த உறுதி மொழியை எடுத்துக் கொள்ளாதீர்கள். செய்து முடிப்பேன் என்ற ஆசையும் மன உறுதியும் இருந்தால் மட்டுமே உறுதி மொழி எடுங்கள்.இல்லாத மொழுது எந்த உறுதி மொழியையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் உறுதி மொழி எடுப்பதே உங்கள் வாழ்கையை ஏதாவது ஒருவிதத்தில் மாற்றுவதற்குத் தான்.அதையும் நீங்கள் சரி வர கடைபிடிக்காத பொழுது உங்களுக்கு நீங்களே தோல்வியைப் பரிசளித்துக் கொள்கிறீர்கள்.அதை ஒரு தொடர் பழக்கமாகச் செய்கிறீர்கள்.பிறகோ ‘எனக்கு எதுவுமே செட் ஆக மாட்டேங்குது’என்று சொல்லி சுய சமாதானம் செய்து நகர்ந்து விடுகிறீர்கள்.
உங்களை நீங்களே தோல்வியாளராக என்றைக்கும் ஒப்புக் கொள்ளாதீர்கள்.அப்படி அடிக்கடிச் செய்தால் அடுத்து வாழ்வில் எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குள் வராது.நீங்களும் எதையும் சாதிக்க வேண்டும் என்ற செயலில் இறங்க மாட்டீர்கள்.யாரும் உங்களை மதிக்கவும் மாட்டார்கள்.
உங்களுக்கு நீங்கள் கொடுக்கும் உறுதிமொழி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை கொஞ்சமேனும் இப்பொழுது உணர்ந்திருப்பீர்கள்.இனிமேல் இதை உணர்ந்து கொஞ்சம் உங்களை நீங்கள் மெருகேற்றிக் கொள்ளுங்கள்.
2 Comments
Nice 👌
ReplyDeleteஉறுதிமொழியை எப்படியேனும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் மேற்கொள்ளும் சில செயல்கள் ஒரு மன அழுத்த்தை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteஅதை எப்படி கையாள வேண்டும் என்று அதைப் பற்றியும் பேசலாமே.