புத்தக வாசிப்பென்பது நம்மிடையே தற்பொழுது அருகி வரும் பழக்கமாகவே மாறிவருகிறது.முன்பெல்லாம் புத்தகங்கள் வாங்குவது என்பது அவ்வளவு சுலபமாக இருந்ததில்லை.நாம் புத்தகக் கடைக்குச் சென்று அலைந்து திரிந்து தான் புத்தகங்களை வாங்க வேண்டும்.அதில் சில நூல்கள் இல்லாத பட்சம் அது அச்சுக்கு வரும் வரை பெயர் கொடுத்து காத்திருந்து வாங்க வேண்டும்.
இன்றைக்கு அந்த நிலைமை இல்லை. நிறைய ஆன்லைன் தளங்கள் இருக்கின்றன.ஆண்டு முழுவதும் ஐந்து சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கும் தளங்கள் கூட இருக்கின்றன.நமக்கு வாங்குவதற்கு நிறைய வழிகள் வந்துவிட்டது.வீட்டில் இருந்தபடியே புத்தகங்களை நம்மைத் தேடி வரவழைக்கலாம்.நாம் தேடும் நூல் இருப்பில் உள்ளதா இல்லையா என்றும் கூடத் வலைதளமே சொல்லி விடும்.எல்லாமே விரல் நுனியில் தான்.
ஆயினும் கூட இந்தக் காலகட்டத்தில் வாசிப்பின் அளவு பெரிதாக இல்லை.நம்மால் சலிக்காமல் அலைபேசி உபயோகப்படுத்த முடிகிறது,ரீல்ஸ் பார்க்க முடிகிறது.ஆனால் புத்தகம் வாசிப்பது தான் பாகற்காயைப் போலக் கசக்கிறது.
புத்தக வாசிப்பை உணர வேண்டுமானால் வாசிப்பது ஒன்று தான் சிறந்த வழி.வாசிப்பு நமது சிந்தனையை மேம்படுத்தும்.நமது அறிவை விரிவு செய்யும்.நம் மன அழுக்குகளை வெளியேற்றி நம்மை இலகுவான மனிதனாக உருமாற்றும்.எது நல்லது எது கெட்டது எது நாகரீகம் என்ற பாகுபாடுகளைச் சொல்லிக் கொடுக்கும் அது.
நமக்கு நாமே வித்தியாசமாக அறிமுகம் ஆவோம்.நமது பழைய கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம் வாசிப்பின் மூலம் வளரும் அல்லது உடையும்.பகுத்தறிவு மேலோங்கும்.நாம் என்பது நமது நிலப்பரப்பு மட்டும் சார்ந்தது.ஆனால் வாசிப்பில் நீங்கள் இந்த உலகில் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம்.
டாலர் தேசத்தை வாசிப்பதன் மூலம் அமேரிக்கா செல்லலாம்,ஆயில் ரேகை வாசிப்பதன் மூலம் வளைகுடாவைச் சுற்றி வரலாம், கிளியோபாட்ராவை படித்தால் எகிப்துக்கு ஒரு விசிட் அடிக்கலாம்,முகலாயர்களைப் படித்தால் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் ஒரு சுற்று சுற்றலாம்.அதற்கெல்லாம் முன் நமது சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளைப் படித்தால் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்களைக் கண்டு உரையாடலாம்.
இப்படி நமக்கு இருக்கும் வாய்ப்புகள் தான் எத்தனை.இவ்வாறாக வாசிக்க வாசிக்க நமது கற்பனை சக்தி மேம்படும்.தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்பார்கள்.நான் இன்னொன்றையும் சொல்கிறேன், கற்பனை தான் கண்டுபிடிப்பின் தந்தை.ஆம் ஒரு பொருளை தேவையின் அடிப்படையில் தான் உருவாக்குகிறார்கள்..ஆனால் கற்பனையில் அந்தப் பொருள் ஏற்கனவே உருவாகிவிட்டது.அதனால் தான் கற்பனையே கண்டுபிடிப்பின் தந்தை என்கிறேன்.
வயர் இல்லாமல் போன் பேசினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் உருவானது தான் செல்போன்.அது ஆரம்பத்தில் நமது கையை விடப் பெரியதாக இருந்தது.அடுத்து விஞ்ஞானம் வளர வளர நமது கைக்குள் அடக்கமாகிப் போகும் அளவிற்கு குட்டிக் குட்டியாக செல்போன்கள் வந்துவிட்டது.
அதன் பிறகு பட்டன் போன்களில் இருந்து தொடுதிரைக்கு வளர்ச்சி என்று செல்போன் கடந்த பத்தாண்டுகளில் கண்ட வளர்ச்சி அபாரம்.இதற்கு எல்லாம் காரணம் கண்டுபிடிப்புகள் மற்றும் கற்பனைகள் தான்.
இன்னும் வருங்காலத்தில் செல்போனே இல்லாமல் கையில் சிப் ஒன்றைப் பொருத்திக் கொண்டு பேச முடியுமா என்று ஆராய்ச்சி செய்து அதன் முடிவில் வெற்றி பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.இப்படி ஒரு துறையிலேயே இவ்வளவு மாற்றங்கள் என்றால் உலகில் எத்தனை துறைகளில் இன்னும் என்னவென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று நமக்கு முழுவதும் தெரியாது.
இப்படி ஒரு அளப்பரிய செயலைச் செய்யக் காரணமாக இருந்தது கற்பனை.அதற்கு அடிகோலுவது தான் இந்தப் புத்தகங்கள்.இவற்றை நீங்கள் இலக்கிய வகைகளாகவும் வாசிக்கலாம்.இல்லை உங்கள் துறை சார்ந்தும் வாசிக்கலாம்.நீங்கள் வாசிக்க வாசிக்க உங்கள் துறையில் முன்னேறிக் கொண்டு செல்வீர்கள.உங்கள் துறையில் நீங்கள் தனித்துவமாக மிளிர்வீர்கள்.நிறைய சாதனைகளை நீங்களும் புரியலாம்.
குழந்தைகளை வாசிக்கப் பழக்குவதன் மூலமாக சிறுவயதில் இருந்தே அவர்களது கற்பனைத் திறனையும் , நல்ல சிந்தனையும் மெருகேற்றலாம்.அதன் மூலம் அவர்களுக்கு நல்ல எண்ணங்களும் அற உணர்வும் மேலோங்கும்.நாளைய சமுதாயத்தில் அவர்கள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.இப்படி வாசிப்பு என்பது நமக்குத் தரும் பயன்கள் ஏராளம்.அது நம்மிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் “வாசிப்பு”.
தினமும் குறைந்தது பத்துப் பக்கங்களையாவது வாசிக்க வேண்டும் என்ற உறுதி மொழியை உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.உங்களை நீங்களே ஏமாற்றாமல் இருக்கப் பழகுங்கள்.வாசிப்பு தன்னால் கைகூடும்.வாழ்கை செழிக்கும்.
0 Comments