நமது வாழ்க்கை நேரத்திற்குள் அடைக்கப்பட்டது தான்.நேரம் நாம் எல்லாருக்கும் ஒரே அளவில் தான் இருக்கின்றது.யாருக்கும் கூடுதலாகவோ இல்லை குறைவாகவோ இருப்பது இல்லை.ஆனாலும் கூட நாம் எப்பொழுதும் நேரம் போதவில்லை என்பதைச் சொல்லி சொல்லி அதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

நாம் நினைத்தால் முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை.எவரெஸ்ட் சிகரத்தை அடைவதும்,இராக்கெட்டை விண்ணில் ஏவுவதும் இன்னொரு மனிதர்கள் தான்.என்ன அவர்களுக்கு அந்தத் தொழில்நுட்ப அறிவும் ,பயிற்சியும் இருக்கிறது அது மட்டுந்தான் வித்தியாசம்.

நாம் அது எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.நமது கட்டுப்பாட்டில் இருக்கும் நேரத்தை நாம் சரிவர பயன்படுத்திக் கொண்டால் போதுமானது.நமது வாழ்கை முழுக்க முழுக்க நமது கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது.அதில் இந்த நேரம் மட்டும் எப்படி களவாடப்படுகிறது? இல்லை நாம் தான் தாரை வார்த்துவிட்டு காணாமற் போனதென்று புலம்புகிறோமா? வாருங்கள் காணலாம்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக ஒரு குறிப்பேட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் நாளைக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று பட்டியல் இடுங்கள்.தப்பித் தவறிக் கூட நிறைய வேலைகளை எழுதி வைத்து விடாதீர்கள்,முக்கியமான நான்கு அல்லது ஐந்து வேலைகள் மட்டும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.அதைத் தினமும் செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

அடுத்த நாள் எழுந்ததும் அந்தப் பட்டியலில் இருக்கும் வேலைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.ஒவ்வொரு வேலைக்குப் பக்கத்திலும் முன்னுரிமைப் படி எண்களைப் போடுங்கள்.அதன் படி அந்த வேலைகளைச் செய்ய ஆரம்பியுங்கள்.

எக்காரணம் கொண்டும் அந்த நாளை அந்த வேலைகளைச் செய்யமால் தூங்கப் போகக் கூடாது என்ற சபதம் எடுங்கள்.உலகத்திலேயே சிறந்த சத்தியப்பிரமாணம் என்னவென்றால் உங்களுக்கு நீங்கள் கொடுக்கும் சத்தியத்தைக் காப்பாற்றுவது மட்டும் தான்.இப்படி தினமும் வேலைகளை நீங்கள் செய்வதைப் பழக்காமாக ஆக்கிக் கொண்டபின் உங்கள் வேலைத் திறன் அதிகமாகி இருப்பதை நீங்கள் உணர முடியும்.

பிறகு நீங்கள் பட்டியலில் வேலைகளின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.அது பத்து,பதினைந்து என எத்தனை வேண்டும் என்றாலும் எழுதி வைக்கலாம்.அதை நீங்கள் செய்து முடித்தவுடன் பேனாவைக் கொண்டு டிக் மார்க் செய்வது மனதளவில் ஒரு திருப்தி உணர்வைக் கொடுக்கும்.

முக்கியத்துவமான பணிகள் செய்ய வேண்டிய பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு சமூக வலை தளங்களை நோட்டம் இடுவதோ,இல்லை தொலைக்காட்சிகளில் மூழ்குவதோ அவசியமில்லாத ஒன்று.

ஏனென்றால் அவற்றில் கிடைக்கும் அந்த நேரத்து இன்பம் அடுத்து நாம் செய்யவிருக்கும் வேலைகளைச் செய்யவே விடாது.அதுவும் போக நீங்கள் செல்போனில் செலவிடும் நேரம் என்பது உங்கள் உடலுக்கு எவ்வித அசைவையும் கொடுக்காது , ஆனால் மூளைகளில் இருந்து ஆற்றலை உறிஞ்சிவிடும்.

எனவே நீங்கள் செல்போன் பயன்படுத்திய பிறகு வேலைகளைச் செய்ய மனம் வராதவராகவே இருப்பீர்கள்.நீங்கள் செய்யும் வேலைகள் எல்லாம் உங்களுக்கு சலிப்பைத் தரக் கூடியதாகவே உங்கள் மனதிற்குத் தோன்றும்.

இதனால் தான் செய்ய வேண்டியவற்றை செய்து முடிக்கும் வரை வேறெங்கும் நமது கவனத்தைச் சிதற விடவே கூடாது.நமது நேரம் நம்மிடமிருந்து நுட்பமாக திருடப்படுகிறது.அது நமது கற்பனைக்கும் எட்டாத வண்ணம் இருக்கும் ஒன்று.திட்டமிட்டு அதற்காக ஆட்களைக் கொண்டு நமது நேரத்தை எடுத்து அவர்கள் பணமாகவோ, எண்ணத் திணிப்புகளாகவோ செய்து எளிதில் நமது மனதை வசப்படுத்துகிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அதை நாம் தெளிவாக அடுத்தடுத்த பதிவில் காணலாம்.எளிமையாக அதன் பிடியிலிருந்து வெளிவரும் நுட்பத்தையும் செயல்படுத்தலாம்.