நம் வாழ்கையில் எந்த ஒரு விசயத்தை நாம் மாற்றிக் கொண்டால் நமது வாழ்கை சிறப்பாக அமையும் என்று நீங்கள் கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு நான் சோம்பேறித்தனத்தைத் தான் சொல்வேன்.நீங்களும் கூட அதைத்தான் சொல்வீர்கள்.

அந்த அளவிற்கு நமது வாழ்வில் இப்பொழுது சோம்பேறித்தனம் பூதாகரமாகி வளர்ந்து நிற்கிறது.அது தான் நமது வளர்ச்சியையும் உருக்குலைத்து வைத்திருக்கிறது.நாம் அடைய வேண்டிய உயரங்களை எல்லாம் அது தடுத்து முடக்கி வைத்திருக்கிறது.அதை அப்படிச் செய்ய வைத்துக் கொண்டிருக்கும் எஜமான் நாம் தான்.

நாம் சரியானால் அது சரியாகும்.அது நம்மில் ஒரு பழக்கமாக வளர்ந்திருக்கிறது.கிட்டத்தட்ட அரளிச்செடி போல.ஒரு பயனும் இல்லை.எனவே அதைப் பிடுங்கிவிட்டு நெல்லை விதைத்தால் பசியாற்றும்.அந்த நெல்லென்பது இங்கே உங்களுக்குத் தேவைப்படக் கூடிய நல்ல பழக்கங்கள் தான்.அதை உருவாக்கும் யுத்திகளைக் காணலாம்.

எப்படி ஏதேனும் ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்குவது என்பதைத் தெளிவாகப் பார்ப்போம்.உதாரணாமாக புத்தகம் வாசிப்பதை எடுத்துக் கொள்ளலாம்.

இலக்குகள் : செய்யக் கூடிய இலக்குகளை நிர்ணயம் செய்வது தான் இதன் முதல்படி. புத்தகம் வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ஒரே நாளில் புத்தகத்தை முடித்தே தீருவேன் என்று முடிவெல்லாம் எடுக்கக் கூடாது.அதுவே பெரிய சலிப்பையும் சோர்வையும் கொடுத்து பின்வாங்கச் செய்யும்.ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.பிடித்தமான நூலை , அளவில் சிறிய நூலை வாங்கி வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.அப்பொழுது தான் விரைவில் வாசித்து முடிக்கும் திருப்தி ஏற்படும்.அது தொடர்ந்து அந்த வேலையைச் செய்ய உதவும்.

வழக்கம் : தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அந்த நேரத்தில் கண்டிப்பாக படிக்க வேண்டும்.புத்தகம் வாசிக்க ஒரு இடத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.அதே இடம்,அதே நேரம் என்ற கொள்கையை தினமும் நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது அதற்கு உங்கள் உடலும் மனமும் பழக்கப்பைடுவதைக் காண முடியும்.

நேரம் : நாம் எல்லாருக்கும் அளவாக இருப்பது நேரம் ஒன்று தான்.அதை அனாவசியமாக மற்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தும் பொழுது அது தீர்ந்து போகும்.பிறகு நமக்குத் தேவையான விசயங்களுக்கு பயன்படுத்த நேரமே இருக்காது.பிறகு வாசிக்கலாம் என்றெண்ணி விட்டு தொலைக்காட்சி பார்ப்பது என்பது ஒரு நேர விரயம் தான்.அதனால் புத்தகத்தை தொடப் பிடிக்காது.

சிறு பிரிவுகள் : ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கையில், அதனை எவ்வளவு சிறு சிறு கூறுகளாகப் பிரிக்க முடியுமோ அப்படிப் பிரிப்பது தான் நல்லது. உதாரணமாக, அத்தியாயம் வாயிலாக அல்லது பக்கங்கள் வாயிலாக அதைப் பிரித்துக் கொள்வது நல்லது.ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் என்றோ அல்லது ஒரு நாளைக்கு பத்து பக்கங்கள் என்றோ உங்கள் நேர வசதிக்கு ஏற்றார் போல் பிரித்துக் கொள்வது சிறந்தது.இது உங்களைத் தொடர்ச்சியாகவும் அதே நேரம் சலிப்பின்றியும் ஒரு வேலையைச் செய்ய உதவும்.

ஒரு நேரம் ஒரு வேலை : ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்வது தான் சிறந்தது.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதால் எதிலுமே உங்களால் சிறந்து விளங்க முடியாது.புத்தகத்தை வாசிக்கக் கையில் எடுத்து விட்டால் தொலைக்காட்சி பார்ப்பது கூடாது. இப்பொழுது நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது இதை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறேன்.பக்கத்தில் பாட்டுக் கேட்பதோ,இல்லை தொலைக்காட்சி பார்ப்பதோ என எதையும் நான் செய்வதில்லை.காரணம், நம்மால் ஒரு விசயத்தில் கவனம் செலுத்தும் பொழுது அதன் முடிவு மிகச் சிறந்ததாக இருக்கும்.நமது முழுத் திறனும் அந்த விசயத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் .

செய்ய ஆரம்பியுங்கள் : புத்தகம் வாசிக்க முடிவெடுத்த பின் நீங்கள் செய்ய வேண்டியது வாசிப்பது மட்டும் தான்.என்னதான் நாம் ‘எப்படி வாசிப்பது?’ ஆயிரம் வீடியோக்கள்,பதிவுகள் பார்த்தாலும் நாம் வாசிக்க ஆரம்பிக்காத வரைக்கும் அது செயலாகவே மாறாது.வாசிப்புப் பழக்கம் தொடர்ச்சியானதும் வேண்டும் என்றால் ‘என்ன வாசிக்கலாம்?’ என்று தேடலாம்.ஆகவே நல்ல நாளுக்காகக் காத்திருக்காமல் இன்றே இப்பொழுதே வாசிக்க ஆரம்பியுங்கள்.எப்பொழுதும் யாரும் வந்து நம்மை உந்தித் தள்ளிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.நமது வாழ்க்கைக்கு ஒரு விசயம் அவசியம் என்று தெரிந்துவிட்டால் அதைப் பிடிக்காவிட்டாலும் கூட செய்ய வேண்டும்.

இது நான் புத்தக வாசிப்பிற்குச் சொன்னது . இதே போல உங்களுக்கு வேண்டுமென்ற பழக்கங்களுக்கு இதே பாணியைப் பின்பற்றலாம்.எல்லாமே உங்கள் மனதில் தான் இருக்கிறது.