நீங்கள் முழு நேர அரசியல்வாதியாக இருந்தால் இந்தப் பதிவை கடந்து செல்லுங்கள்.
அரசியல் நம் வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஒன்று.அரசியலின்றி நாம் இல்லை.நாமன்றி அரசியல் இல்லை.ஆனால் இன்றைய அரசியல் நம்மில் வெறுப்பைத் தான் மறைமுகமாக விதைத்துக் கொண்டிருக்கிறது.நம்மையும் அறியாமல் அதற்குப் பலிகடா ஆகிக் கொண்டிருக்கிறோம்.
அவரவர் தலைவர்களுக்காக, கட்சிக்காக,கொள்கைகளுக்காக வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.எல்லாருக்கும் மனக் கருத்துகள் என்பது வேறு.எல்லாருக்கும் ஒரே போல இருப்பது கிடையாது.
இதில் உங்களுக்குப் பிடித்த கட்சிக்காக கொள்கைக்காக இன்னொரு மனிதரிடம் வாதாடுவதும்,உங்கள் அரசியல் அறிவுத்தனத்தைக் காண்பிப்பதும் வேடிக்கை தான்.
நீங்கள் வக்காலத்து வாங்கும் அரசியல்வாதிகளுக்கு உங்களை யாரென்று கூடத் தெரியாது.அவர்களுக்காகத் தான் நீங்கள் உடனிருக்கும் நண்பர்களை/உறவினர்களை/சகோதர சகோதரிகளை/தெரிந்தவர்களைப் பகைத்துக் கொள்கிறீர்கள்.விவாதம் செய்கிறீர்கள்.அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது உங்களுக்கே தெரியும்.
உங்களுக்கு ஒரு கட்சியோ கொள்கையோ பிடித்தால் அதை நீங்கள் தேர்தல் நேரத்தில் வாக்குச் செலுத்தும் பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களால் நீங்கள் விரும்பும் கட்சிக்கு செய்யக் கூடிய அதிகபட்ச உதவியே வாக்களிப்பது தான்.அந்தக் கட்சிக்கும் உங்களிடம் இருந்து அது மட்டும் தான் தேவையும் கூட.
ஆனால் அதே போல எல்லாரையும் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றோ இல்லை அந்தக் கட்சியின் கொள்கைகளை எதிர்த்துப் பேசக் கூடாது என்றோ கூறுவது எல்லாம் எந்த விதத்திலும் சரி அன்று.
களமாடுபவர்கள் ஆடட்டும்.வெற்றி தோல்வி அவரவர் கொள்கைப்படி கிடைக்கக் கூடிய ஒன்று.எவரோ ஒருவருக்காக நீங்கள் ஏன் வீட்டிலும், வெளியிலும் உற்றவர்களுடன் அடித்துச் சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்.நீங்கள் ஆதரவு தெரிவித்து வாதம் செய்யும் கட்சிக்கு நீங்கள் வெறும் ஒற்றை வாக்கு.ஆனால் உங்கள் குடும்பத்துக்கும்,நண்பர்களுக்கும் நீங்கள் அப்படிக் கிடையாது.
எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் நிறைய அரசியல் புரிதலில் வேறுபாடு இருக்கிறது.ஆனால் நாங்கள் பேசிக்கொள்ளும் பொழுது அரசியல் மட்டும் பேசவே மாட்டோம்.அந்த நிலைப்பாடை இருவரும் என்றைக்கோ எடுத்து விட்டோம்.ஒரு அரசியல் கருத்தியல் ரீதியாக நட்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே என் நிலைப்பாடு.
நீங்கள் ஆதரவு அளிக்கும் அதே கட்சிக்காரர்கள் மாற்றுக் கட்சிக்காரர்கள் வீட்டில் சம்பந்தம் செய்கிறார்கள்.கூட்டுத் தொழிலில் பார்ட்னர்களாக இருக்கிறார்கள்.உயர் மட்டத்தில் இருக்கும் எல்லாரும் கண்ணும் கருத்துமாக சரியாகவே அரசியல் செய்கிறார்கள்.பாவம் சாமானியர்கள் தான் வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் அனாவசியமாக சண்டை போடுகிறார்கள்.
சிலர் பதிவிடும் கமெண்டுகள் எல்லாம் படிக்க முடியாத வகையில் தரம் தாழ்ந்ததாக இருக்கும்.அது சரி அரசியலைப் பற்றி கருத்திடும் பொழுது நாகரீகமாக கருத்துகளை எழுத கை வராது போல.
என் நண்பர்களாகிய உங்களுக்கு ஒன்றை மட்டும் இறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.வீட்டுக்கு உள்ளே நுழையும் பொழுது உங்கள் அரசியல் கொள்கைகளை செருப்பைப் போல கழற்றி விட்டு வாருங்கள்.குடும்பத்தில் பேசுவதற்கு ஆயிரம் இருக்கும்.அரசியல் பேசி வீண் வாதம் செய்யாதீர்கள்.
0 Comments