உங்கள் வாழ்க்கையில் உடனடியாக ஒரு மாற்றத்தை உண்டாக்க விரும்பினால் நீங்கள் சரியான கட்டுரையைத் தான் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்.எழுத்தாளர் மெல் ராபின்ஸ் எழுதிய ஐந்து வினாடி விதி என்ற புத்தகத்தில் நான் பயின்றதைத் தான் எளிமையாகச் சொல்லப் போகிறேன்.
சின்ன வயதில் நாம் ஓடிப் பிடித்து விளையாடும் பொழுது என்ன செய்திருப்போம் ஞாபகம் இருக்கிறதா? ஒன்..ட்டூ..த்ரீ..கோ என்று ஓட ஆரம்பித்துவிடுவோம்.உடனேயே துரிதமாகச் செயல்படுவோம் அல்லவா.அதைத்தான் அவரும் செய்யச் சொல்கிறார்.
நீங்கள் ஏதாவது ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்றால் அதைப் பற்றி பெரிதாக எல்லாம் சிந்திக்கவே கூடாது .உடனேயே அதன் மேல் செயலாற்றத் துவங்க வேண்டும்.அப்பொழுது தான் நீங்கள் அதனைப் பற்றிய அதிக சிந்தனைக்குள் மூழ்காமல் அதை செய்ய ஆரம்பிப்பீர்கள்.
நான் இந்தக் கட்டுரையை இப்பொழுதே எழுதலாமா? வேண்டாமா? இல்லை பிறகு எழுதலாமா? என்ற எண்ணம் எனக்குள் வர ஆரம்பித்த உடனேயே “இப்பொழுதே மெல் ராபின் விதியைப் பயன்படுத்தி எழுதி விடு 5..4..3..2..1 ம்ம் ஆரம்பிக்கலாம்” என்று எனக்கு நானே உடனடிக் கட்டளையிட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இப்படித்தான் நான் சமீபமாக என் வேலைகளுக்கு ஐந்து வினாடி விதியைப் பயன்படுத்துகிறேன்.இது எனக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கிறது.முன்பெல்லாம் நான் மிகவும் சோம்பேறித்தனம் கொண்டு எதையும் தள்ளிப்போடும் பழக்கம் கொண்டவனாக இருந்தேன்.
ஆனால் ஒரு நாள் யோசித்துப் பார்த்த்தேன்.போன் உபயோகிக்க மட்டும் என் மனம் சலித்துக் கொள்வதே இல்லை.ஆனால் போட்காஸ்ட் பேசவோ,இல்லை கட்டுரை எழுதவோ என்றால் மனம் கசந்துவிடுகிறது.இப்படி எனக்குத் தேவையான, என் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய விசயங்களைச் செய்ய நான் ஏன் இவ்வளவு யோசிக்க வேண்டும் .அது மட்டுமில்லாமல் நான் என் திறமைகள் சார்ந்த விசயங்களைத் தள்ளிப் போடுவதால் என் வாழ்வில் கிடைக்கும் நல்ல அனுபவங்களும் நல்ல மாற்றங்களும் தள்ளிப் போகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
இதை நான் என்று உணர ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து என் வேலைகளை அன்றாடம் செய்வதை நான் வழக்கமாக்கிக் கொண்டேன்.பிடித்தாலும் சரி,இல்லையென்றாலும் சரி பாட்காஸ்ட் பேசியே ஆவேன்.மழையடித்தாலும் சரி புயலடித்தாலும் சரி என்னிடம் கணினி இல்லாவிட்டாலும் சரி மொபைலில் டைப் செய்தாவது ஒரு ப்ளாக் பதிவை எழுதி விட வேண்டும் என்று எனக்கு நானே தீர்மானம் எடுத்துக் கொண்டேன்.
எந்த வேலையாக இருந்தாலும் சரி தினமும் குறைந்தது பத்தாயிரம் அடிகளாவது நடந்து தான் அந்த நாளை முடிக்க வேண்டும் என்று எனக்கு நானே சுய கட்டுப்பாடு விதித்துக் கொண்டேன்.அதன் மூலம் தினமும் என் செயலை எனக்கு நானே ஆய்வு செய்கிறேன்.
அந்தச் செயல்களை எல்லாம் உடனேயே செய்ய வைக்க எனக்கு எழுத்தாளர் மெல் ராபின்ஸ் அவர்களது ஐந்து வினாடி விதி பெருமளவில் உபயோகமாக இருக்கிறது.எனக்குப் பிடித்தமான விசயமாக இருந்தாலும் சரி,பிடிக்காத விசயங்களாக இருந்தாலும் சரி அது என் வாழ்க்கைக்குப் பயன்படும் விசயம் என்று தெரிந்துவிட்டால் அதை நான் இந்த விதியைப் பயன்படுத்தித் தான் செய்ய ஆரம்பிக்கிறேன்.அது எனக்குள் நல்ல மாற்றத்தையும் கொடுத்திருக்கிறது.
நீங்களும் உங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய முக்கியமான் விடயங்களுக்கு இந்த விதியைப் பயன்படுத்திப் பாருங்கள்.உதாரணமாக, ஜிம் செல்ல வேண்டுமா? வேண்டாமா ? என்ற எண்ணம் உங்களுக்குள் வந்தால், உடனேயே 5..4..3..2..1..Go ஷுவை மாட்டிக் கொண்டு ஜிம்மிற்கு சென்று விடுங்கள். அங்கே அவ்வளவு நபர்கள் ஓடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்தவுடன் உங்களால் சும்மாவே இருக்க முடியாது.
படிக்க ஆசையாக இருக்கிறதா? புத்தகத்தை உடனேயே கையில் எடுங்கள். 5..4..3..2..1..Go படிக்க ஆரம்பியுங்கள்.அவ்வளவு தான் இப்பொழுது நீங்கள் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.இப்படியாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன மாற்றத்தை வேண்டுமானாலும் கொண்டு வர முடியும்.ஆனால் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றமான செயல்களுக்கு மட்டும் நீங்கள் இதைப் பயன்படுத்துங்கள்.அப்படி நீங்கள் இதைப் பயன்படுத்தித் தேர்ச்சி பெற்று விட்டால் உங்கள் செயல்கள் எல்லாம் எளிமையாக தன்னால் நடைபெற ஆரம்பிக்கும்.நீங்களும் எதையுமே தள்ளிப் போட மாட்டீர்கள்.
உங்களால் எதுவுமே முடியாதது என்று இல்லை.நீங்கள் முயற்சி செய்யாதது மட்டும் தான் காரணம்.எல்லாமே பழக்கம் தான்.இதையும் முயற்சி செய்து பாருங்கள்.உங்கள் நண்பர்களில் யாருக்கு இந்தப் பதிவு உதவுமோ அவர்களுக்கு இதைப் பகிரவும் செய்யுங்கள்.சேர்ந்து வாழ்க்கையை மாற்றுவோம்.
0 Comments