அதென்ன பழக்க அடுக்கம்? தலைப்பே சொல்கிறது.பழக்கங்களை அடுக்குவது.அதெப்படி பழக்கங்களை அடுக்கலாம்? நாம் எதற்கு அப்படிச் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
நம்மால் ஒரு வேலையைப் பழக்கமாக மாற்ற நாம் மெனக்கெட வேண்டும்.தினமும் அதற்கான உழைப்பைக் கொடுக்க வேண்டும்.அது பிடிக்காமல் இருந்தால் கூட அதை நாம் செய்தே ஆக வேண்டும்.அப்பொழுது தான் அது நமக்குப் பழக்கமான ஒன்றாக மாறும்.ஆனால் ஒரு வேலையை பழக்கமாக மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான விடயம் கிடையாது.நாம் மிகவும் மன உறுதி கொண்டவராக இருந்தால் மட்டும் அது சாத்தியம்.
சரி,அப்படி மன உறுதி இல்லாதவர்களால் எதுவும் புதிதாகப் பழக்கத்தை உருவாக்க முடியாதா? என்றால் முடியும்.அதற்குத்தான் இந்த பழக்கங்களை அடுக்கும் விதி பயன்படும்.இதை எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏற்கனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் பழக்கமான வேலையுடன் புதிய வேலையை முடிச்சுப்போட்டு செய்யும் பொழுது அது உங்களுக்கு எளிமையாக கைகூடும்.
ஒரு உதாரணத்தை நாம் இங்கே பார்க்கலாம்.தினமும் காலையில் எழுந்ததும் உங்கள் அறையைத் தூய்மை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.ஆனால் அது உங்களுக்கு முடியாத காரியமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? காலையில் எழுந்ததும் உங்கள் அறையைச் சுத்தம் செய்ய துடைப்பத்தை எடுக்கக்கூடாது.
ஏற்கனவே அதிகாலை எழுந்ததும் என்ன பழக்கம் உங்களுக்கு இயல்பாகவே இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.காலையில் எழுந்ததும் நாம் முதலில் செய்யும் வேலை பல்துலக்குவது தான்.எனவே பல்துலக்குவதையும் அறையைத் தூய்மை செய்வதையும் நீங்கள் முடிச்சுப்போட வேண்டும்.எழுந்ததும் பல்துலக்கிவிட்டு வந்தவுடன் துடைப்பத்தை எடுத்து அறையைத் தூய்மை செய்ய ஆரம்பியுங்கள்.
இப்படி முடிச்சுப் போடுவதன் மூலமாக பல்துலக்குதலோடு வீடு சுத்தம் செய்வதும் சேர்க்கிறது.ஆக பல் துலக்கிவிட்டு வந்தவுடன் துடைப்பத்தை அன்றாடம் கையில் எடுக்கும் பொழுது அதுவும் உங்களுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும்.இப்படி ஒரு பழக்கத்தைப் புதிதாக ஆரம்பிக்கும் பொழுது வரும் சிக்கல்,ஏற்கனவே இருக்கும் ஒரு பழக்கத்துடன் இணைந்து செய்யும் பொழுது நமக்கு வராது.
இப்பொழுது வாசிப்பை எடுத்துக் கொள்ளலாம்.வாசிக்க என்ன தேவை புத்தகமும் நேரமும் தான்.உங்களிடம் இரண்டு கேள்விகள் கேளுங்கள்.வாசிக்கப் புத்தகம் இருக்கிறதா? இருக்கிறது.வாசிக்க நேரம் இருக்கிறதா? இல்லை.இல்லையென்றால் எங்கே அதிகம் செலவிடுகிறீர்கள் என்று கவனியுங்கள்.உங்கள் செல்பேசியை தேவையற்ற நேரங்களில் எடுப்பதை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் செல்பேசியில் FOCUS MODE என்ற செயல்முறை ஒன்று இருக்கிறது.நீங்கள் வாசிக்கும் பொழுது அதைக் கிளிக் செய்தால் சமூக வலைத்தளம் எல்லாமே பயன்படுத்த முடியாதபடி மாறிவிடும்.அதில் நீங்களே கூட இன்னும் எந்த எந்த செயலி எல்லாம் தேவையில்லையோ அதில் சேர்த்துக் கொள்ளலாம்.உங்கள் நேரத்தை அதிகம் எடுக்கும் அத்தியாவசியமற்ற அப்ளிக்கேசன்களை நீங்கள் தர்காளிகமாக நிறுத்திக் கொள்ளலாம்.
இப்பொழுது உங்களிடமும் நேரமும் இருக்கிறது.ஆனால் இதை வாசிக்கப் பயன்படுத்தி அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் இயல்பாக இருக்கும் ஒரு பழக்கத்தின் மேல் இதைத் திணிக்கப் பாருங்கள்.காலையில் எழுந்ததும் தான் உங்களுக்குப் படிக்க நேரம் இருக்கும் என்று நினைத்தால் உங்கள் படுக்கைக்குப் பக்கத்தில் புத்தகத்தை வைத்துவிட்டு தூங்கச் செல்லலாம்.எழுந்ததும் பல்துலக்கிவிட்டு அருகில் இருக்கும் புத்தகத்தை எடுத்து பத்துப் பக்கமாவது படித்த பிறகு தான் அலைபேசியை எடுப்பேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு அதைப் பின்பற்ற ஆரம்பியுங்கள்.
அடுத்து நீங்கள் இரவு படிப்பவராக இருந்தால் இரவு உணவை முடித்த கையுடன் புத்தகம் வாசிப்பேன் என்று உறுதி எடுக்கலாம்.இரவு உணவை முடித்த உடனேயே உங்கள் அருகில் இருக்கும் புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பியுங்கள்.இப்படி ஏற்கனவே இருக்கும் ஒரு விடயத்துடன் இன்னொன்றைக் கோர்க்கும் பொழுது எந்தச் சலிப்பும் இல்லாமல் நீங்கள் புதிய பழக்கத்தைச் செய்ய நிறையவே வாய்ப்பிருக்கிறது.
இதை பழைய பழக்கத்தைப் போல உறுதியாக மாற்ற தினமும் நீங்கள் செய்ய வேண்டும்.பத்துப் பக்கம் படிக்க சலிப்பாக இருந்தால் ஐந்து பக்கங்களையாவது வாசியுங்கள்.இங்கே பக்கங்கள் முக்கியம் கிடையாது.நாம் தினமும் அந்த குறிப்பிட்ட நேரம் நாம் நமக்கு உறுதியளித்தது போல வாசிக்க வேண்டும்.அவ்வளவுதான்.
இப்படி நீங்கள் என்ன பழக்கத்தைப் புதிதாக கடைபிடிக்க நினைக்கிறீர்கள் என்றொரு பட்டியல் போடுங்கள்.கூடவே என்னென்ன விடயங்கள் அன்றாடம் பழக்கமாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் மற்றொரு பட்டியல் போடுங்கள்.இரண்டிலும் எதோடு எதைச் சேர்த்துச் செய்ய வேண்டும் என்று இறுதியாக ஒரு பட்டியலைப் போடுங்கள்.அவ்வளவுதான் முடிந்தது.எதையும் பழக்கமாக நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
0 Comments