நன்றியுணர்வு

 

நன்றியுணர்வு என்பது பற்றி நிறைய வித விதமான காணொளிகள் சமூக வலைதளங்களில் தேடினால் கிடைக்கும்.நன்றியுணர்வு என்றால் என்ன ? அது என் வாழ்வில் என்ன என்ன மாதிரியான மாற்றங்களை உண்டாக்கியது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

நாம் மனிதர்களுடன் தான் வாழ்கிறோம்.ஒருவருடைய கொள்கைகள் இன்னொருவருக்கு என்றும் பிடிப்பதில்லை.நாம் மற்றவர்களைக் குறை சொல்வதற்கு நம்மிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.

ஆனாலும் அதை விடுத்து நாம் நன்றியுணர்வை பயிற்சி செய்யும் பொழுது நம்மில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் ஏராளம்.நாம் எவற்றிற்கு எல்லாம் நன்றியுடன் இருக்கிறோம் என்பதை அன்றாடம் நினைவு கூறுவது தான் இந்த நன்றியுணர்வு.

அன்றாடம் நாம் குறை சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு நல்ல விசயங்களை மட்டும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை மட்டும் பட்டியலிட்டு அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

“இன்னைக்கு நான் நேரமாக எழுந்தேன் எனக்கு நன்றி”

“இன்னைக்கு இந்தப் புத்தகத்தில் நல்ல கருத்துகள் கத்துக்கிட்டேன் அதுக்கு நன்றி”

“இன்னைக்கு எனக்குப் பிடிச்ச சாப்பாடு கிடைச்சது அதுக்கு நன்றி “

இப்படி தினமும் குறைந்தது ஐந்து விசயங்களுக்காகவாது நன்றி சொல்லப் பழகுங்கள்.எதுவுமே தெரியாவிட்டால் முதலில் எளிமையாக ஆரம்பிக்கத் துவங்குங்கள்.

“இன்றைக்கு நான் உடல் நலத்தோடு இருக்கிறேன் அதற்கு நன்றி”

“இன்றைக்கு நான் பிடித்த பாடல்/படத்தை இரசித்தேன் அது கொடுத்த நல்ல மன நிலைக்கு நன்றி” இப்படியாக எத்தனையோ விசயங்கள் நமக்கு இருக்கிறது. நாம் நிறைய விசயங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

ஆனால் எப்பொழுது பார்த்தாலும் நாம் குற்றங்களைச் சொல்லித்தான் புலம்புகிறோம்.

“இந்த ஊர் சரியில்ல”

“இங்க அதிகம் டிராபிக்”

“அவன் சரியில்ல, இவன் சரியில்ல”

“என் வேலை சரியில்ல”

“எனக்கு எந்த நல்லதுமே நடக்க மாட்டேங்குது”

என்று நாம் குறை மட்டுமே பட்டியல் போட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இப்படி நாம் தினமும் நம்மையும் அறியாமலேயே பட்டியல் போட்டு புலம்புவதாலும் குறை சொல்வதாலும் இது நமக்குள் ஒரு பழக்கமாக உருவெடுத்து நமக்குள் வேர் விட்டு நிற்கிறது.

இப்படிக் குறை கூறிகொண்டே இருப்பதால் நமக்கு என்ன நல்லது நடக்கிறது என்றும், நமக்கு நடக்கும் செயல்களில் எவை எல்லாம் நல்லது என்பதனையும் நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

உண்மையைச் சொல்லப் போனால் அன்றாட வாழ்க்கையில் நாம் மகிழ்ந்திருக்க நிறைய காரணங்கள் இருக்கிறது.நாம் வெறுப்பையும்/துன்பத்தையும் மட்டுமே ஈர்த்துப் பட்டியல் போடுவதால் அது நமது கண்களுக்குத் தெரிய மறுக்கிறது.இல்லை நாம் பார்க்க மறுக்கிறோம் என்பதே உண்மை.

இனியாவது நன்றியுணர்வைப் பயிற்சி செய்யுங்கள்.அதைச் செய்வது மிக எளிமை.

ஒரு டைரி/நோட்டு/பேப்பர் எதையாவது எடுத்துக் கொள்ளுங்கள்.அன்று இரவு தூங்கச் செல்லும் பொழுது உங்களுக்கு அந்த நாளில் என்னவென்ன நல்லதெல்லாம் நடந்தது என்று பட்டியல் போட்டு எழுதுங்கள்.அது ஐந்தோ பத்தோ, இவ்வளவு தான் என்ற எண்ணிக்கை எல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்.நல்லவற்றை நாமே ஏன் எண்ணிக்கைக்குள் அடைக்க வேண்டும்.அதே போல அதிகாலை எழுந்ததும் நீங்கள் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.முந்தைய நாள் என்ன என்னவெல்லாம் நடந்தது,எதற்கு எல்லாம் நன்றியுணர்வோடு இருக்கிறீர்கள் என்று காலை வேளையில் நீங்கள் எழுதும் பொழுது உங்கள் மூளைக்கு நல்ல உத்வேகம் கிடைக்கும்.அது உங்கள் அதிகாலையில் ஆரம்பித்து அந்த நாளையையே  நல்ல நேர்மறையான/கொண்டாட்ட மன நிலையில் வைத்திருக்கும்.

நான் பாலா நாட்களாக நன்றியுணர்வை இரவில் எழுதி  வருகிறேன்.அது எனக்கு நல்ல பலன் தருகிறது.எவை எல்லாம் என் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நானே மறுவாசிப்புக்கு உட்படுத்தும் பொழுது அது எனக்கு நல்ல நியாபகத்தைத் தருகிறது.அதே போல மனிதர்களின் மேலான வெறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.ஒரு வித மன அமைதி எப்பொழுதும் நம்மைச் சூழ்ந்த படி இருக்கும்.

இந்த உலகத்தில் மன அமைதியை விட மிகப் பெரிய வெகுமதி ஒரு மனிதனுக்கு வேறென்ன இருந்து விட முடியும்? அதனால் சொல்கிறேன் இன்றிலிருந்து நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நன்றியுணர்வைக் கொண்டு வாருங்கள்.

இந்தக் கட்டுரையை வாசித்ததற்கு நன்றி .

உங்களுக்கு என்றென்றும் அன்பும் மகிழ்வும் நிறைந்திருக்கட்டும்.