வாழ்க்கையில் நாம் நினைத்த மாதிரியே எல்லாம் நடந்தால் நல்லது தான்.ஆனால் சில நேரங்களில் நாம் நினைத்தது நினைத்தது போல நடப்பதில்லை.அந்த நேரங்களில் நாம் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டிருப்போம்.

கிடைத்த கொஞ்ச நேரத்தில் நான் எனது யூடியுப் சேனலுக்கு ஒரு ஆடியோ பதிவு பேசலாம் என்றிருந்தேன்.ஆனால் என்னைச் சுற்றி மைக் செட்டில் பாட்டு ஓட ஆரம்பித்து விட்டது.அப்பொழுது நான் பேசினால் அந்தப் பாட்டின் தூரத்து இசையும் அதில் இரைச்சல் போலக் கலந்து ஒலிக்கும்.கேட்க நன்றாக இருக்காது.

சரி என்று அந்த நேரத்தை ஏன் வீணாக்குவானேன் என்று ப்ளாகிற்கு கட்டுரை எழுதலாமே என்று எழுத ஆரம்பித்தேன்.இதை எந்த இரைச்சலாலும் தொல்லை செய்திட முடியாது.கட்டுரை எழுத எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அமர்ந்ததும் எப்படி ஆரம்பிக்க எப்படி முடிக்க என்றும் புரியாமல் இருந்தேன்.எதை எழுத என்றும் தெரியவில்லை.இப்பொழுது நடந்ததையே எழுதலாமே என்று எழுத ஆரம்பித்தது தான் இது.

இப்பொழுது நான் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிப்பேன் என்பதை நானே நம்பவில்லை.ஏன் தெரியுமா? எழுத அவ்வளவு சோம்பலாக இருந்தது.ஆனாலும் கூட இந்த இடைவேளை நேரத்தை விட்டால் அடுத்து எப்பொழுது நேரம் கிடைக்குமோ என்று யோசித்தே எழுத உட்கார்ந்தேன்.

அடுத்து நான் பணியில் மூழ்கி விட்டால் இனிமேல் எழுத எப்பொழுது நேரம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்கி எழுதுவது என்பது எவ்வளவு வசதியானது என்பது எழுத நேரம் இல்லாமல் அலையும் பொழுது தான் தெரிகிறது.ஆகவே எழுதக் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் வீண் செய்யாமல் எழுதுவதற்குப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது என்ற முடிவை எனக்கு நானே எடுத்துக் கொண்டேன்.

நான் எடுத்த முடிவில் பின்வாங்காமல் இருப்பது ஒன்று தான் எனக்கு நானே செய்து கொள்ளும் நன்மை.எனக்கு நானே செய்த சத்தியத்தை நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்கள்.எனக்கு நானே உண்மையாக இல்லாமல் போனால் வேறு யார் எனக்கு உண்மையாக இருப்பார்கள்? என்ற கேள்வியை அடிக்கடி நான் என்னிடம் கேட்டுக் கொள்வேன்.

ஒரு வேளை நானும் எழுதுவதற்கு என்று தனியாக நேரம் கிடைக்கும் கிடைக்கும் என்று இலவு காத்த கிளி போலக் காத்திருந்து அப்படி ஒரு நேரமே கிடைக்காமல் போகும் அளவிற்கு பணிச்சுமை கூடி விட்டால் நான் அன்றைக்கு எழுத வேண்டிய எழுத்துகள் எதையும் எழுத முடியாது. என்ன நடக்கும் என்று நம்மால் எதையும் கணிக்க முடியாது தானே.

ஆகையால் தான் கிடைக்கும் வாய்ப்பை மகிழ்வோடு ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும்.அதில் நமக்கு நாமே என்ன நன்மையைச் செய்து கொள்ள முடியும் என்று யோசிக்க வேண்டும்.

எல்லா நேரமும் நாம் நினைத்தது மட்டுமே நமக்கு நடக்காது.நாம் செய்ய வேண்டிய காரியங்களில் நாம் மன உறுதியோடு இருந்தாலும் கூட புறக்காரணிகள் நம்மை ஏதாவது ஒரு வழியில் தொந்தரவு செய்யலாம்.

அதை நினைத்துக் குமைவதோ புலம்புவதோ கூடாது.அந்த நேரத்தில் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.அதை ஏற்றுக் கொண்டால் தான் அதை ஆமோதித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் நமது கவனம் செல்லும்.

நிகழ்ந்த ஒன்றை ஏற்றுக் கொள்ளாமல் நாம் புலம்பிக்கொண்டே இருப்போமேயானால் புதிதாக எதையும் நாம் சிந்திக்க மாட்டோம்.இவ்வளவு ஏன் நாம் சிந்திப்பது அந்தப் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாகக் கூட இருக்கலாம்.அப்படி என்னால் ஆடியோ பேச முடியாது என்பதை ஆமோதித்ததால் தான் நான் ப்ளாக் எழுத ஆரம்பித்தேன்.

பேசமுடியாமல் போனதே என்று அதையே நினைத்துக் கொண்டு புலம்பிக் கொண்டே இருந்திருந்தால் இந்நேரம் இதை என்னால் எழுதிக் கொண்டிருக்க முடியாது.அடுத்து சமயம் கிடைக்கும் பொழுது நான் ஆடியோ பதிவைப் பேசிக் கொள்வேன்.அதே சமயம் இன்றைக்கு நான் செய்ய வேண்டிய எழுத்துப் பணியையும் இதோ இப்பொழுது முடித்து விட்டேன்.ஒரு வேலையைச் செய்ய முடியாமல் போயிருந்தாலும் இன்னொரு வேலையைச் செய்ய முடிந்ததில் எனக்கு முழுத் திருப்தி.

வாழ்கை நமக்கு எதை வேண்டுமானாலும் கொண்டு வரட்டும். அதில் நமக்கு என்ன சிறந்தவற்றைச் செய்ய வேண்டுமோ அதை நாம் தீர்மானித்துக் கொள்வோம். வாழ்வெனும் புதிர் விளையாட விளையாடத்தான் சுகப்படும்.