எல்லாவற்றிலும் நேரம் கடத்துபவனாக , தள்ளிப் போடுபவனாக ,சாக்குப் போக்குகள் சொல்லிக் கொள்பவனாகவே இருந்தேன் நான்.நிறைய சுய முன்னேற்றப் புத்தகங்களும் நேர நிர்வாகம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை யுட்யூபில் பார்த்தபடி இருந்தேன்.

ஆனால் என் வாழ்க்கையில் எதுவுமே மாறவில்லை.எப்பொழுதும் போலவே என் வேளைகளில் இருந்து விலகியோடிக் கொண்டிருந்தேன்.பத்து நாட்களுக்கு முன்பாக நான் ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.அது எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் என் வாழ்க்கையே மாற்றி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அது நான் வாசித்துக் கொண்டிருக்கும் ப்ரியன் ட்ரேசி எழுதிய நேர நிர்வாகம் புத்தகம் தான்.

ஆங்கிலத்திலும் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. எல்லா சுய முன்னேற்ற நூல்களைப் போலவும் தான் இந்தப் புத்தகமும்.ஆனால் நான் இதைப் படித்த கையேடு அதில் சொல்லப்பட்டிருந்த சின்ன சின்ன வழிமுறைகளைக் கையாள ஆரம்பித்தேன்.

அது என்னுடைய அன்றாட வேளைகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.செய்து முடிக்க வேண்டிய வேலைகளை எப்படிப் பட்டியலிடுவது? எப்படி அதை முன்னுரிமைப்பைடுத்துவது? எப்படி அதை வரிசைக் கிரமமாகப் பிரித்து செய்வது? எது நாம் செய்யப்பட வேண்டிய வேலையே இல்லை என்பது தொட்டு எது நாம் பிறரிடம் ஒப்படைக்க வேண்டிய வேலை என்பது முதல் அவர் சொல்லியிருப்பார்.

அதில் சில விடயங்களை என் வாழ்க்கையில் நான் பரிசோதித்துப் பார்த்தேன்.எனக்கு அது நல்ல பலன் அளித்தது. இத்தனை நாள் நான் எவ்வளவோ சுய முன்னேற்றம் நிமித்தமான நூல்களை வாசித்திருந்தாலும் அவற்றை நான் செயல்படுத்த நினைத்ததேயில்லை.இந்த நூலை செயல்படுத்த ஆரம்பித்ததன் விளைவு தான் என் வேலைகளை நான் அன்றாடம் நல்ல முறையில் முடித்ததற்குக் காரணம்.

ஏன் இந்தப் புத்தகம் எனது மனதுக்கு ஒத்துப்போய் நான் செய்ய ஆரம்பித்தேன் என்பது பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது.இதே எழுத்தாளர் எழுதிய மற்ற நூல்களை நான் படித்திருந்த பொழுதும் அவற்றை செய்து/முயன்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதிற்குள் எழுந்தது இல்லை.

ஆக நமக்கு எந்த நூல் ஒத்துப்போகும் என்றோ அல்லது நமது வாழ்வை எந்தப் புத்தகம் மாற்றும் என்று நமக்கு அந்தப் புத்தகத்தை வாசிக்கும் வரை தெரியாது.ஆகவே தான் சொல்கிறேன் நிறைய புத்தகங்கள் வாசியுங்கள்.

ஒவ்வொரு புத்தகமும் நமக்கு எதையாவது ஒன்றை சொல்லிக் கொடுத்தே தீரும்.அது நமக்கு தெரியாது.ஒரு நாள் நம்மையும் அறியாமல் நாம் கற்றவை எல்லாம் நமக்கு எதோ ஒருவிதத்தில் உதவிக்கரமாக இருக்கும்.நமக்குப் பயன்படாது போனாலும் நம்மைச் சார்ந்தவருக்கு வழி காட்டும் அளவிற்கு நம்மில் அது உருவேறி இருக்கும்.

நான் FOCUS ON WHAT MATTERS என்ற ஆங்கில நூலை வாசித்துக் கொண்டிருந்தேன்.அந்த சமயம் அதில் ALTURISTIC இப்படியாக ஒரு வார்த்தையை நான் வாசிக்க நேர்ந்தது.இந்த வார்த்தை எனக்குப் புதிதான ஒன்றாகத் தென்பட்டதால் நான் கூகுளின் உதவியை நாடினேன்.அதுவோ அதற்கு சரியான தமிழ்ச் சொல்லாக பரோபகாரம் என்று காண்பித்தது.

இதென்ன நமக்கு வந்த சோதனை என்று இந்த தமிழ் வார்த்தையைப் பற்றித் தேட ஆரம்பித்து அரைகுறை புரிதலுடன் அப்படியே விட்டுவிட்டேன்.பின்னர் அதே தினத்தன்று இறையன்பு அவர்கள் எழுதிய குற்ற உணர்வு நூலை வாசித்தேன்.அதில் அதற்கான தெளிவான விளக்கம் இருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

ஒரு ஆங்கில நூலில் இருந்த தெரியாத வார்த்தையின் அர்த்தம் ஒரு தமிழ் நூலில் கிடைக்கப் பெற்றேன்.இவ்வளவும் இது நடந்தது ஒரே தினத்தில் தான்.இதை என்னவென்று சொல்ல.எதார்த்தமாக நடந்தாலும் நான் வியப்புக்குள்ளானேன்.

இப்படியாக நம்மை வளப்படுத்தும், மேம்படுத்தும் நூல் எதுவென்பதைக் கண்டு கொள்ள நாம் வாசிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு நூலும் நமக்கு ஏதாவது ஒரு விடயத்தையாவது சொல்லிக் கொடுக்கும்.ஒன்று அது நாம் பின்பற்ற வேண்டிய நல்ல விடயங்களாக இருக்கலாம்.இல்லை நாம் விட்டொழிக்க வேண்டிய தீய விடயங்களாக இருக்கலாம்.  

எனவே நாள்தோறும் வாசியுங்கள்.உங்கள் வாழ்வையும் உங்கள் சமுதாயத்தின் வாழ்வையும் மேம்படுத்துங்கள்.