எது உங்கள் மதிப்பு?

 

இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லாரும் நம் மதிப்பை நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்தே அளவிடுகிறோம்.உதாரணமாக, ஒருவர் வைத்திருக்கும் விலையுயர்ந்த செல்போன்,கார்,இவற்றை வைத்தே மதிப்பை அளவிடும் ஒரு மாய நிலைக்குள் நாம் என்றோ நம்மை பணையம் வைத்துக்கொண்டோம்.

அதன் நீட்சியாகவே நாமும் நம்மிடம் அந்தக் கார் இல்லையே, அந்த பைக் இல்லையே, இன்னும் புது மாடல் மொபைலுக்கு அப்டேட் ஆகாமல் பழைய போனையே உபயோகித்துக் கொண்டிருக்கிறோமே என்று மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் வைத்திருக்கும் பொருட்களை வைத்து நமது மதிப்பை நிர்ணயிப்பதால் அந்தப் பொருள் நம்மிடம் இல்லாத பொழுதோ அல்லது அதன் புதிய வடிவத்துக்கு நாம் மாறாத பொழுதோ நம்மை நாமே சுயபட்சாதாபத்துடன் பார்க்கிறோம்.

அடுத்தவர்களையும் நாம் அப்படியே நினைக்கிறோம்.அதே போலவே அடுத்தவர்களும் நம்மை என்ன நினைப்பார்களோ என்று ஒரு சுய கழிவிரக்கம் நம்மை ஆட்கொள்கிறது.இது மிக மிக ஆபத்தான மன நிலையாக நான் காண்கிறேன்.

நம் மதிப்பானது நாம் செய்யும் செயல்களையும் நமது நடத்தையையும் உள்ளடக்கியது .நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து இல்லை.

நம்மிடம் ஒரு பொருள் இருப்பதால் நமது மதிப்பு உயரப்போவதும் இல்லை.அந்தப் பொருள் நம்மிடம் இல்லாமல் போனால் நமது நிலை தாழ்ந்து போவதும் இல்லை.

நாம் நமது எண்ணங்களை பொருட்களுடன் இணைத்துக் கொண்டே இருப்பதால் காலப்போக்கில் நமது மதிப்பையும் பொருட்களுடன் நாம் ஒப்பிட்டுக் கொள்கிறோம்.

இப்படி யோசியுங்கள், விலையுயர்ந்த காரில் வந்து இறங்கும் நபர் ஒருவர் உங்களை மதிக்காமல் அல்லது தாகாத வார்த்தைகளைச் சொல்லிப் பேசினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

‘அட எவ்வளவு மதிப்பான காரில் வந்த நபர் என்னைத் திட்டுகிறாரே!’ என்று மகிழ்வாக இருப்பீர்களா இல்லை ‘என்ன இவருக்கு அடிப்படைப் பேச்சு நாகரீகம் கூடத் தெரியவில்லை?’என்று குற்றம் கூறி சண்டைக்குச் செல்வீர்களா? கண்டிப்பாக இரண்டாவதைத் தான் செய்வீர்கள்.

ஏன் என்றால் அங்கே அவரது நடத்தை தான் அவரது மதிப்பைத் தீர்மானிக்கிறதே தவிர அவர் வந்து இறங்கிய கார் ஒன்றும் இல்லை.

போலவே நாம் விலையுர்ந்த பொருட்களைப் பயன்படுத்துவான் மூலமாக அவற்றிற்கு நாம் மார்கெட்டிங் தான் செய்கிறோம்.அதாவது நாமே ஒரு பொருளை வாங்கி அந்தக் கம்பெனிக்கு இலவசமாக ப்ரமோஷன் செய்வதைப் போலத்தான் அது.

சரி அப்படியென்றால் விலையுயர்ந்த எதுவுமே வாங்கக் கூடாதா? என்று நீங்கள் என்னைக் கேட்பது என் காதில் விழுகிறது.தாரளாமாக வாங்குங்கள்.அது உங்கள் வாங்கும் சக்தியைப் பொறுத்தது.ஆனால் அது இங்கே பேசு பொருள் கிடையாது.

இங்கே பேசு பொருளாக இருப்பது நீங்கள் வைத்திருக்கும் பொருட்களால் உங்கள் மதிப்பு இல்லை என்பது தான்.அதே போல இன்னொருவரின் மதிப்பும் அவர் வைத்திருக்கும் பொருட்கள் சார்ந்ததாக இருக்கக் கூடாது.

மனிதர்களின் மதிப்பு என்பது அவரவர் நடந்துகொள்ளும் நற்பண்பின் அடிப்படையிலும் நல்ல சிந்தனைகளின் அடிப்படையில் மட்டும் தான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

ஆகவே நீங்கள் எப்பொழுதும் உங்கள் மதிப்பை உயர்வாக நினையுங்கள்.உங்களிடம் இருக்கும் பெரும் விலையிலான பொருட்கள் உங்கள் மதிப்பினால் தான் கிடைக்கப் பெற்றவை என்பதை எப்பொழுதும் நினைவிற் கொள்ளுங்கள்.உங்களை விட நீங்கள் வைத்திருக்கும் எந்தப் பொருளின் மதிப்பும் உயர்ந்தது அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.உங்களிடம் இருப்பதால் தான் அந்தப் பொருளுக்கே மதிப்பு என்ற ஒன்று இருப்பதாக நினையுங்கள்.மாறாக அந்தப் பொருளால் உங்கள் மதிப்பு உயரவில்லை என்பதை மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ளுங்கள்.

எல்லாரும் சமம் என்பது நாம் எல்லாரும் அறிந்த உண்மை.அதைக் கூட்டவும் குறைக்கவும் பொருட்கள் என்றைக்கும் உதவாது என்பதை பசுமரத்தாணி போல மனதில் நிறுத்தி சக மனிதர்களை மதித்திடுவோம்.