எல்லாமே நம் கையில்!

ஆம். எல்லாமே நம்ம கையில் தான். நாம உடல் எடையைக் குறைக்கனும்னு நினைக்கிறோம் ஆனால் குறைக்க முடியலனும் சொல்றோம்.காரணம் என்னனு கேட்டா நாம ஜங்க் எனும் குப்பை உணவுகளைச் சாப்பிடுகிறோம்.
ஆக அதைத் தடுக்க என்ன வழி. அதைச் சாப்பிடாமல் இருப்பதுதான்.ஆனால் அதை நாம் மேற்கொள்வதோ அதை முயற்சி செய்து பார்ப்பதோ கூட இல்லை.
குறை மட்டும் சொல்லி ஆதங்கப்பட்டுக் கொள்கிறோம்.

என் வைராக்கியத்தை நானே அவ்வபொழுது பரிசோதனை செய்து பார்ப்பேன். அப்படித்தான் இந்த ஆண்டு நான் இண்டர்மிட்டண்ட் பாஸ்டிங் இருக்க ஆரம்பித்தது. இது 55 வது நாள்.
பெரிதாக ஒன்றுமே இல்லை.
சாப்பிடுவதற்கென்று ஒரு நேரமும், சாப்பிடாமல் இருப்பதற்கு ஒரு நேரமும் ஒதுக்கிக் கொள்வது.

14 மணி நேர சாதாரண விரத முறையில் தான் இருக்கின்றேன்.ஆனால் பேலியோ ,கீட்டோ போல தீவிர உணவுக்கட்டுப்பாடுகள் இன்றி வீட்டில் கிடைத்த உணவுகளை அளவோடு சீரான இடைவெளியில் உண்டு விரதமுறை கடைபிடிக்கிறேன்.ஆனால் மாவுச்சத்தை முடிந்த மட்டும் குறைத்து நார்ச்சத்து,புரதச்சத்தை மிகுதியாக எடுத்துக்கொள்கிறேன்.

Mindful Eating என்பதைக் கொஞ்ச நாளாக முயற்சி செய்ததில் நல்ல பலனை உணர்கிறேன்.அளவாக உண்பதில் இருக்கும் செளகர்யம் பழகிவிட்டால் மிதமிஞ்சி உண்பது குற்ற உணர்வாகவே தெரிய ஆரம்பிக்கும். நல்ல குற்ற உணர்வு அவசியம் தான்.

நண்பர் ஒருவர் பேசும் பொழுது முன்பு சொன்னார், நாம சரியா அளவா சாப்பிட்டால் சாப்பிட்ட பிறகும் கூட ஒரு முழு மூச்சை உள்ளிழுத்து விட எந்தச் சிரமும் இருக்காதுனு. 'அட ஆமால்ல சரிதான்' என்று நான் சமீபமாக அதை உணர்கிறேன்.

நம் உடலின் இயக்கத்திற்கும் செயல்பாடுகளுக்கும் உணவு தான் எரிபொருள்.ஆனால் நம் உணவு அமைப்பானது முழுக்க முழுக்க மாவுப் பொருள்களால் ஆனதாயிருக்கிறது.இது தான் சரியானது, சத்தானது என்று நம்மை நம்பவும் வைத்து விட்டார்கள்.எனவே ஒரு நாளைக்கு இரண்டு முட்டை சாப்பிட்டால் கூடக் கெட்டது , கொழுப்பு ஏறும் என்று நம்மைப் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இது முழுக்கப் பொய். அசைவப் பிரியராக இருந்தால் நல்ல புரதங்களான முட்டை, இறைச்சி வகைகளை அதிகம் எடுங்கள்.கூடவே நல்ல காய்கறி, பழங்களைச் சாப்பிடுங்கள்.

மாவுச்சத்தான அரிசி,இட்லி,தோசை, சப்பாத்தி, கோதுமை, சிறு தானியம் உட்பட என்னென்ன மாவுச்சத்து இருக்கோ அவைகளை எல்லாம் எனர்ஜிக்காக அளவாக எடுத்துக் கொள்ளுங்கள்.உணவின் ஊட்டச் சத்துகள் உடலில் கலக்க நிறைய நீர் அருந்துங்கள்.பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள்.பசிக்கிற மாதிரி இருந்தால் அது தண்ணீர் தாகமாகக் கூட இருக்கலாம்.தண்ணீர் குடித்துப் பாருங்கள்.தாகமாக இருந்தால் அடங்கிவிடும்.

அதற்குப் பிறகும் பத்து பதினைந்து நிமிடங்களில் பசி எடுத்தால் அது தான் பசி.
நமக்குப் பசிக்கும் தாகத்திற்குமே வித்தியாசம் தெரியாமல் இருக்கிறோம்.அதிக உடல் உழைப்பின் போது மட்டும் தான் நாம் தாகத்தைத் தரம் பிரித்து அறிகிறோம்.மற்ற நேரங்களில் அப்படிக் கிடையாது.அதே போல வேளாவேளைக்குச் சாப்பிடுவதும் தவறு.மூன்று வேளையும் பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள்.இல்லையென்றால் இரண்டு வேளையே போதும். உணவென்பதை இமோஷனலாக ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில், யூட்யூபில் நம்மிடம் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

எங்காவது போகும் பொழுது அங்கே இருக்கும் உணவகத்தைத் தேடிச் சாப்பிட்டது போய், சாப்பிடுவதற்கென்றே நம்மைப் பயணப்படச் சொல்கிற ஒரு நிர்பந்தத்தைத் நம்முள் அழகியலாகத் திணிக்கிறார்கள்.கொஞ்சம் உடலைக் கவனித்துக் கொண்டால் அது அவ்வளவு சீக்கிரம் நம்மைச் சீர் கெட விடாது.
நம் கையில் தான் எல்லாமே இருக்கிறது.எதை எடுத்து உண்ண வேண்டும் என்று.
மனசு அப்பப்ப டெம்ட் பண்ணும் அத எடு, இத எடுனு. எப்பவாச்சும் கேட்டுக்கோங்க.எல்லா நேரமும் அது சொல்றதக் கேட்காதீங்க. ஏன்னா அதுதான் மூளையில்லையே.🙋‍♂️