~ இவங்க செய்தில சொன்னாலே புயல் வராது.
லீவெல்லாம் வேஸ்ட்

~ இவங்க கணிக்கிறதே வேஸ்ட்.அதெல்லாம் புயலே வராது.என்னைக்காச்சும் லீவு விட்டா மழை வந்துருக்கா?

புயலை யாரும் கணிக்க முடியாது.நமக்கு இருக்கும் அறிவியலைக் கொண்டு எங்கு வரும்,மணிக்கு எத்தனை  கிமீ வேகத்தில்
வரும் என்று கணிப்பது வளர்ச்சி தான் .ஆனால் மக்களுக்கு அதுவும் போதமாட்டேங்குது.

இன்னும் துல்லியமாக எதிர்பார்க்கிறார்கள். புயல் எங்கே வருகிறது, எந்தத் திசையில், எங்கே வரலாம் என்ற அனுமானம் தான் யாராலும் கணிக்க முடியும்.அது கரையை எந்தப் பக்கம் கடக்கும் என்பது அந்தப் புயலுக்கே தெரியாது.

உதாரணமாக,
நீங்கள் ஒரு காரில் செல்கிறீர்கள்.எங்கே நிறுத்த வேண்டும், எப்படி வண்டியை இயக்க வேண்டும், எப்படி முந்த வேண்டும் என்றெல்லாம் விதி இருக்கிறது.உங்கள் இயக்கத்திற்குக் கார் கட்டுப்படும்.ஆனால் புயல் ஒரு இயற்கைப் பேரிடர்.அதனிடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.புறவயமாக நாமும் எந்தக் கட்டுப்பாடும் அதில் செலுத்த இயலாது.

நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான்.அந்த இடத்தை விட்டு அகன்று செல்வது.நம் உயிரைத் தற்காத்துக் கொள்ள புயல் வருவதாகச் சொல்லப்படும் பகுதியில் இருந்து விலகியிருப்பது.இதைத்தவிர நம்மால் எதுவுமே செய்ய முடியாது.ஏன்னா நாம சொல்றதை புயல் கேட்காது.புரிந்த நாம் தான் இடம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

மாறாக, 'வரும்னு சொன்ன புயல் வரலை'என்பது போன்ற கேள்விகளை நாம் முன்வைக்க வேண்டிய அவசியமே இருக்கக் கூடாது.வந்து எந்தச் சேதமும் ஏற்படுத்தாமல் போனதே , அல்லது பாதையை மாற்றிக் கொண்டு போனதே நல்லது என்று தான் நாம் நினைக்க வேண்டும்.

வருமென்று சொன்னார்கள் வரவில்லை என்பதைச் சொல்வது எள்ளி நகையாடுவதற்கும் பகடி பண்ணுவதற்கும் எதுவுமே இல்லை. 

போலவே நாம் இருப்பது அயன மண்டல வெப்பப் பகுதி. ஆகையால் வெயில் தான் கொளுத்தும்.அவ்வபொழுது வானிலை மாறும் இப்படியான மாதங்களை கொஞ்சமேனும் இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.இதை விட்டால் பிறகு வெயில்.ஆம் சுட்டெரிக்கும் வெயில்.

மற்ற நாடுகளில் மக்கள் கடும் குளிர் மாதங்களில் இருந்து மீண்டு வெயில் மாதங்களுக்குள் வரும் நாளை கொண்டாடுவார்கள்.பனியில் வீட்டை விட்டு வெளியேறாமல் சம்மரில் அவர்களால் சுற்ற முடிவதைக் கொண்டாடுவார்கள்.

நமக்கு எல்லாமே எரிச்சல் தான்.

~(ஒரு வேளை மழை வந்தால்)
நச நசன்னு மழை பெஞ்சுட்டே இருக்கு.

~ (இதுவே வெயில் காலங்களில்)
என்ன வெயில் இப்டி பொளந்துகட்டுது.

பேச நமக்கு எதாவது இருந்து கொண்டே இருக்க வேண்டும்.