வாசிப்புப் பழக்கம் என்பது நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒன்று.
அன்றாடம் செய்யக் கூடிய விடயமாக அதை மாற்றிக் கொள்வது சாலச்சிறந்தது.

நமது நம்பிக்கைகளை , அறிவை மேம்படுத்தவும் சீர்படுத்தவும் வாசிப்பைத் தாண்டி எதுவும் பெரியதாக உதவி செய்துவிட முடியாது.உங்களை உங்களுக்கே தோலுரித்துக் காட்டும் ஒரு அற்புதச் செயல்தான் வாசிப்பு.

புதிதாக வாசிக்க ஆரம்பிப்பவர்கள்
முதலில் பெரிய பெரிய புத்தங்களைப் படிக்க ஆரம்பிக்காதீர்கள்.சலிப்பைக் குடுக்கும்.

மனித மனம் எதுக்கெடுத்தாலும் பாராட்டை /களிப்பை எதிர்பார்க்கும்.அதனால தான் டோபமைனைத் தரும் ரீல்ஸ்,வீடியோ பாக்க நாம் தவறுவதில்லை.மொபைலை கையை விட்டு வைப்பதில்லை.

எனவே சின்ன புத்தகங்களில் இருந்து ஆரம்பியுங்கள்.படித்து முடித்ததும் உங்களுக்கு நீங்களே பரிசைக் கொடுத்துப் பாராட்டிக் கொள்ளுங்கள்.அந்தப் பரிசும் புத்தகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

நேரமும் வாய்ப்பும் இருந்தால்
வாசிப்பு இயக்கம், குழுக்களில் சேர்ந்து பங்காற்றுங்கள்.உரையாடுங்கள்.கூடுமானவரை மொபைலில் புத்தகங்களை வாசிக்காதீர்கள்.அச்சு நூலாக வாங்கி கைகளில் புரட்டிப் படியுங்கள்.வாய்ப்பில்லாத பொழுது கிண்டில் மின் நூலைப் பயன்படுத்தி வாசிக்கலாம்.

அவ்வளவு தான்.வாசிக்க ஆரம்பிக்கலாம் நீங்கள்.
அன்றைய நாள் தூங்கச் செல்லும் பொழுது குறைந்தது பத்துப் பக்கங்களையேனும் படிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதேபோல வாசிக்க நேரமில்லை என்பது நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சாக்குபோக்குகள் தான்.நாம் உண்மையிலேயே அவ்வளவு பிஸி எல்லாம் கிடையாது.வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவது கிடையாது.

உங்கள் நேரம் எங்கே திருடப்படுகிறது என்பதை நீங்கள் தான் கண்காணிக்க வேண்டும்.போலவே அலைபேசியில் நாளொன்றுக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதைப் பார்க்கும் ( digital well being / your hour mobile app) வசதியும் இருக்கிறது.அதில் உங்கள் நேரம் எங்கே செல்கிறது என்பதைக் கண்டறியலாம்.

எல்லாருமே
நிறைய வாசியுங்கள்.
நிறைய எண்ண மேம்பாடு அடையுங்கள்.
பிறரையும் வாசிக்கத் தூண்டுகள்.பிறருடன் பேசும் பொழுது நல்ல புத்தகங்களைப் பற்றிச் சுவராசியமாகப் பேசி அவர்களுக்குள்ளும் வாசிக்கும் எண்ணத்தை வரவழையுங்கள்.

நன்றி