புத்தகம் : எரியும் பனிக்காடு
ஆசிரியர் : பி.எச்.டேனியல்
தமிழில் : இரா. முருகவேள்  

ஐம்பொழில் பதிப்பகத்தோடு சீர் வாசகர் வட்டமும் இணைந்து நூலை மக்கள் பதிப்பாக குறைந்த விலையில் கொண்டு வந்தது பாராட்டுக்குரிய விடயம்.நிறைய வாசகர்களைச் சென்றடைய இம்முயற்சி நன்மை பயப்பதாக இருக்கும்.

Red tea என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் சிவப்புத் தேநீர் என்று தானே இருக்க வேணும். ஏன் எரியும் பனிக்காடு என்ற பெயரில் இருக்கிறது என்று யோசிப்பீர்களேயானால் கதை அதற்கான பதிலைக் கொடுக்கும். 

நாம் விரும்பி அருந்தி மகிழும் தேநீருக்குப் பின்பு நம் மூதாதையர்கள் எண்ணோற்றரின் வலி, வேதனை , உயிரிழப்பு மற்றும் சொல்ல முடியாத இன்னல்கள் பல காரணமாயிருக்கிறது.அவர்களின் அட்டைக் கடி இரத்தித்தில் விளைந்ததால் என்னவோ தேநீர் அந்த நிறத்தில் இருக்கிறதா தெரியவில்லை.

அநீதி, அதிகாரம் ,அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள் எல்லாமே இதில் கரைபுரண்டோடும்.வெள்ளைக்காரர்களின் அடக்குமுறை ஒரு பக்கம் என்றால் அவர்களுக்குக் கும்பிடு போடும் நம்மவர்களின் அடக்குமுறை அதைவிடக் கொடுமையாக இருக்கும்.

நூறு வருடத்திற்கு முன்னால் தேயிலைத் தோட்டங்களுக்குள் உங்களை இந்த நூல் கண்டிப்பாக அழைத்துச் செல்லும்.திரும்பி நீங்களாக வந்தால் தான் உண்டு.

அதே போல அலெக்ஸ் ஹெய்லி எழுதிய Roots நாவலின் சுருக்கப்பட்ட பதிப்பாக ஏழு தலைமுறைகள் நாவலும் இருக்கிறது.இந்த நாவலை நாம் கனத்த மனதோடு தான் வாசித்துக் கொண்டே இருப்போம்.அப்படியொரு உலுக்கு உலுக்கிவிடும்.அதில் வரும் குண்டா கிண்டே வைப் போல இதில் கருப்பனை நினைத்துக் கொண்டேன்.அளவில் வேறானாலும் வலியிலும் சுரண்டலிலும் இருவரும் ஒத்துப் போகிறார்கள்.

எரியும் பனிக்காடு (Red Tea)
ஏழு தலைமுறைகள் (Roots)
இரண்டுமே வாழ்வில் ஒரு முறையேனும் நாம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.