"சென்ற மாதம் வார இறுதி நாட்களை என்னால் மறக்கவே முடியாது.எங்கள் வீட்டில் எல்லாரும் சேர்ந்தே உணவருந்தினோம்.பிறகு சேர்ந்தே மாலையில் நடைபயிற்சி சென்றோம்.பிறகு நான் கொஞ்சம் வாசித்தேன்.எழுதினேன்.அன்றைக்கு இரவு ஒரு நல்ல திரைப்படம் பார்த்தேன்.அந்த நாள் அவ்வளவு இனிமையானதாக இருந்தது."
இது ஆங்கில தன்னம்பிக்கை எழுத்தாளர்
டாரியஸ் ஃபோரக்ஸ் அவரது நூலான Focua on what Matters ல் சொன்னது.
அயல் நாட்டில் எல்லாம் சின்னச் சின்ன காரியங்களைக் கூட உணர்வு ரீதியாகத்தான் அணுகுகிறார்கள்.நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ அவர்கள் குடும்ப அமைப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள்.அதைப் போற்றிப் பேணுகிறார்கள்.
ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையும், ஒன்றாக அமர்ந்து சில வார்த்தைகள் பேசுவதையும், இன்ப துன்பங்களைப் பகிர்வதையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.சிறு பிராயம் முதலே ஆண் குழந்தைகளும் உணர்ச்சியைக் காண்பிக்கிறார்கள்.பாகுபாடின்றி அழுகிறார்கள்.இங்கெல்லாம் ஆம்பளைப் பிள்ளை அழுதால் அசிங்கம் என்பார்கள்.
நமக்கு எது கிடைக்காமல் இருக்கிறதோ அதுவே பிரதானமாகத் தோன்றும்.அதைப் போலத்தான் முன்பெல்லாம் அயல் நாட்டில் உறவுச் சிக்கல்கள் நிறைய இருந்தது.அங்கே அதனால் விவாகரத்தெல்லாம் சர்வ சாதாரணம்.இங்கே அதெல்லாம் இன்றைக்குத்தான் நமக்குப் பரவாலக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே அங்கே கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் பிரிவுகள் என்பது மிக அதிகம்.அப்படி இருந்தாலும் கூட அவர்கள் மறு மணத்தின் மீதும், அடுத்தாக ஒரு வாழ்வைத் தேடுவதையும் குற்றவுணர்வாகக் கருதுவதேயில்லை.
மாறாக அடுத்த உறவிலாவது தமக்கு ஏற்ற துணை கிடைக்காதா என்பதுதான்.அதனால் தான் அவர்கள் குடும்ப அமைப்பைப் பெரிதாகவும் அதை நேர்த்தியாக உருவாக்கவும் முயற்சி செய்கிறார்கள்.அதுதான் அவர்களை மனிதர்கள் மீதான தேடுதலை ஒரு தோல்விக்குப் பின்பும் உந்தித்தள்ளுகிறது.
இங்கே அது பாவம்.இங்கே எதுதான் பாவமில்லை.மறுமணம், மறு காதல், எல்லாம் பாவம் தான்.அதுவும் பெண்கள் விடயத்தில் அதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத விடயம்.துணை என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்றுதான்.இது ஆணுக்கு ஒரு மாதிரி இருப்பதும் , பெண்ணுக்கு ஒரு மாதிரி இருப்பதும் இருபதாம் நூற்றாண்டின் அசிங்கங்கள்.
தனக்கான இணையைத் தேடிக் கொள்வதென்பது ஒருவர் உரிமை.அதில் யாருக்கும் எந்தக் கருத்தும் சொல்வதற்கு உரிமையில்லை.ஆனால் குடும்பம் என்ற கட்டமைப்பில் நாம் வாழ்வதனாலேயே
நம் வாழ்க்கையை எந்த நிலைக்கும் ஆட்டி வைக்கலாம் என்பது கட்டமைப்பின் எழுதப்படாத விதி.கட்டமைப்பை மீறுபவர்களை அன்று முதல் இன்று வரை ஒதுக்கி வைப்பதையும் ஒரு சம்பிரதாயமாகச் செய்கிறார்கள்.
நமது வாழ்க்கை முறையானது சமுதாய அமைப்பைச் சுற்றியே இருந்து வருகிறது.குடும்பம் தான் சமுதாயத்தின் அடிப்படை அலகு.இது உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ஏற்றாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை.
இங்கே குடும்பம் என்பது நீங்கள் உங்கள் பெற்றோருடனோ, அல்லது நீங்கள் பெற்றவருடனோ அல்லது உடன் சார்ந்து வாழும் மனிதர்களுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை. நீங்கள் எங்கு சென்று விட்டு வந்தாலும் இறுதியில் வீட்டிற்குள் தான் நுழையப் போகிறீர்கள்.
இந்த வாழ்க்கையை நீங்கள் அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ உங்களிடம் இருப்பது ஒரே ஒரு வழி தான். அது உடனிருப்பவர்களுடன் கூடுமானவரை இணக்கத்துடன் வாழ்வது.அது தான் நிம்மதியைத் தரும்.அதுவும் போக நிம்மதியைத் தவிர வேறெதுவும் பெரிதாக மகிழ்ச்சியைத் தந்துவிடாது.
2 Comments
Nice 🙂
ReplyDelete👍👌👏👏
ReplyDelete