சமீபத்தில் நான் இதை எல்லா வீடுகளிலும் காண்கிறேன்.அதாவது ஆங்கில வழிக் கல்வியில் படிக்கும் பிள்ளைகள் எல்லாரும் வீட்டிலும் ஆங்கில மொழியையே பேசுகிறார்கள்.

பெற்றோர்களைக் கேட்டால் பள்ளியில் அப்படித்தான் அறிவுறுத்துகிறார்கள் என்கிறார்கள்.குழந்தைகளுக்குப் பள்ளியில் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அது கல்விமுறை சார்ந்தது என்ற நோக்கில் நாம் எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் வீட்டில் ஆங்கிலம் பேசுவது என்பது தமிழைச் சிதைத்து விடும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

இப்பொழுது இருக்கும் குழந்தைகளுக்கு எளிமையான தமிழ் வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் கூடத் தெரிவதில்லை என்பது வருந்தததக்க விடயமாக இருந்து வருகிறது.இப்படியே போனால் தமிழையே அவர்கள் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும்.

தமிழைப் படிக்கவும் சிறுவர்கள் மிகவும் கடினப்படுகிறார்கள்.எட்டாம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட எழுத்துக் கூட்டிப் படிக்கச் சிரமப்படுகிறார்கள்.வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதாகத் தெரிவதேயில்லை.

பெற்றோர்கள் தான் வீட்டில் குழந்தைகளுக்கு கட்டாயமாக தமிழ் பேச வேண்டும் என்ற உணர்வைக் கொடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் தமிழே அவர்களுக்குப் பிறகு இல்லாமல் போய்விடும்.நம்மை விட்டு எல்லாமே பழமை என்ற பெயரில் ஒருபக்கம் காணாமற் போய்க்கொண்டு இருக்கிறது.அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஒரு மொழி நம்மை வீட்டு விலகுவது என்பது சற்றே நம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் தான்.அதை நாம் உடனேயே கருத்தில் கொண்டு ஒவ்வொரு வீடுகளிலும் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.குழந்தைகள் பெற்றோர்கள் உதவியின்றி தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவும் முடியாது,விட்டு விலகவும் முடியாது. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தத்தம் குழந்தைகள் வீட்டில் தமிழில் பேசுவதையே உறுதி செய்திட வேண்டும்.

சுமார் எட்டு மணி நேரம் வசிக்கும் பள்ளிக் கூடங்களில் அவர்கள் ஆங்கிலம் பேச ஒரு சூழல் இருக்கிறது.அதற்கான கட்டாயமும் இருக்கிறது.அதனால் அவர்களுக்குள் ஆங்கிலம் தழைத்து வளர்கிறது.வளரட்டும்.அந்த மொழியின் அறிவு அவர்களுக்கு பணி வாய்ப்புகளில் முன்னுரிமை தரும் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் பள்ளியை முடித்துவிட்டு வந்த பிறகும் வீட்டிலும் அதே விடயங்கள் தொடர்ந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு தமிழ் மொழி என்பது பாகற்காய் போல ஆகிவிடும்.வளர வளர அது தேவையற்ற ஒன்றாகவே தெரியவரும்.பிறகு அதை அவர்கள் சுத்தமாக சுமையென கழற்றி விடுவார்கள்.

ராஜஸ்தானி மொழி என்பது வழக்கொழிந்து போய்விட்டது என அம்மாநில மக்கள் சிலர் சொல்வார்கள்.இந்தியின் ஆதிக்கம் அங்கே அந்த மொழியையே காணாமற் போகச் செய்து விட்டது.அதன் பழமை அதன் இலக்கிய வளம் எல்லாம் தெரிந்த நபர்கள் மிகவும் அருகிவிட்டார்கள் என காணொளி கண்டேன்.

அதே போல மராட்டிய மாநிலத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தேர்வாகும் நபர்கள் கண்டிப்பாக மராட்டிய மொழி அறிந்திருக்க வேண்டும் என்று இடையில் ஒரு சட்டம் போட்டார்கள்.இந்தி அதிகமாக உபயோகம் செய்யப்படுவதால் மராட்டிய மொழியின் பயன்பாடு குறைந்து விட்டது என்று வருத்தப்படுகிறார்கள்.இது மிகவும் வேதனையான செயல்.தனது சொந்த மாநில மொழியை ஒரு அரசு பாதுகாக்க என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்.

நமக்குத் தமிழுடன் ஆங்கிலத்தைத் தவிர வேற எந்த மொழியும் இல்லை.ஆங்கிலமும் கூட நமக்கு ஒரு நல்ல இணைப்பு மொழி தான்.ஆனால் அந்த இணைப்பு மொழியானது நம் தமிழை அடுத்த தலைமுறை மக்களிடம் இருந்து இரையென விழுங்கிவிடக் கூடாது என்று பார்க்கிறேன் நான்.

இனிமேல் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் தமிழில் பேசுவதை பெற்றோர்கள் உறுதி செய்து அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்.நாளிதழ்கள் அல்லது இலக்கியங்கள்,கதைகள் என அவர்களைத் தமிழின் மறுபக்கங்களைக் காண அழைத்து வர வேண்டும்.பாடப் புத்தகங்களையும் தாண்டி இருக்கும் தமிழின் சுவையை , பொருளை அவர்கள் உணரும் வண்ணம் சுவாரசியமாகவும் எளிமையாகவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இப்படிக் கொஞ்சமேனும் சிரத்தை எடுத்துக் கொண்டால் மட்டுமே அவர்களுக்குள் தமிழ் மொழியை ஆவலுடன் வேர் விடச் செய்ய முடியும்.மொபைல் போன்கள் அவர்களது கவனத்தை ஏற்கனவே பாலா வழிகளில் சிதறடித்துக் கொண்டிருக்கிறது.இந்தக் காலக் குழந்தைகள் அதனாலேயே எளிதில் மூளைச் சோர்வு அடைந்துவிடுகிறார்கள்.அவர்களை தமிழ் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் வரவழைத்து அதை வாசிக்கவும் உள்வாங்கவும் பேசவும் வைப்பது பெற்றோரின் தலையாய கடமை.நாளைய சமுதாயமும் எதிர்காலமும் அவர்கள் தான்.அவர்களை இன்றிலிருந்து மொழியின் வழியாகச் சரியாக வழி நடத்துவோம்.