#எழுதுகிறேன்_ஒரு_கடிதம்_சீஸன்8

பேரன்பும் பெருமதிப்புங் கொண்ட ஐயாவுக்கு,

நான் முதல் முதலாக பள்ளி மேல் படிப்பிற்காக என் கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்திற்குப் படிக்க வந்த பொழுது அது எனக்குப் பயத்தையே தந்தது.அத்தனை பெரிய கட்டிடங்கள் ,போக்குவரத்து நெரிசல்கள் என மிரட்சியே கண்டேன்.

முதல் நாள் அப்பாவும் உடன் வந்திருந்தார்.கற்தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வயிறு வலிப்பதாகச் சொல்லி என்னை அப்படியே கூட்டிக் கொண்டு போகச் சொன்னேன். “அதெல்லாம் முத நாத்து அப்டித்தான் இருக்கும் ஒழுங்கா படி”என்ற அப்பா உங்களிடம் தான் அழைத்து வந்தார்.

தமிழாசிரியர்கள் இலக்கணம் சொல்லித் தருவதைப் போல அவர்களுக்கென்று ஒரு இலக்கணம் அந்நாளில் இருந்தது.கட்டம் போட்ட ஜோல்னா பை ஒன்றை வைத்திருப்பீர்கள் நீங்கள்.பார்வைத் தெளிவிற்காக ஒரு மூக்குக் கண்ணாடி.கோல்ட் ப்ரேம் போட்ட வாட்ச் ஒன்றைக் கட்டியிருப்பீர்கள். ஒவ்வொரு பாட வேளைக்கு மணியடிக்கும் பொழுதும் அதைத் தூக்கிப் பார்த்துவிட்டு “இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு அதுக்குள்ள மணி அடிச்சுட்டாங்களா” என்பீர்கள். எவ்வளவு நடத்தினாலும் உங்களுக்குப் போதாததாகவே இருந்தது.

நீங்கள் எப்பொழுதுமே எங்களுக்கு வித்தியாசமாகத்தான் தெரிந்திருந்தீர்கள்.எல்லாரையும் சார் என்று அழைக்கும் பொழுது உங்களை ஐயா என அழைப்பதே எங்களுக்குப் புதுவிதமாக இருந்தது.மனப்பாடப் பகுதியை மனப்பாடம் செய்யாமல் படிப்பதெப்படி என வரிக்கு வரி அர்த்தம் காணச் சொன்னவர் நீங்கள் தான்.

மதிய வேளையில் பாடம் நடத்த வரும் சமயங்களில் எல்லாம் தூங்கி வழியக் கூடாதென்று ஆளுக்கொரு புளிப்பு  மிட்டாயைக் கொடுத்து ஏதாவது ஒரு கதை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்.அதற்குப் பிறகு தான் பாடத்திற்குள் அழைத்துச் செல்வீர்கள்.

இரண்டு நாளாக வராத சிவநேசனை அழைத்துக் காரணம் கேட்டு அவன் படிப்புக்கான கட்டணத்தை நீங்களே செலுத்தி அவனை எங்களுடன் அமரச் செய்தீர்கள்.படிப்பு ஏன் அவசியமென்பதை ஏதாவதொரு செயலின் மூலம் நீங்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள்.

ஒரு நாள் உணவு இடைவேளையில் சாக்லேட் கவரில் நான் நண்பர்களுக்கு விசில் அடிக்கச் சொல்லிக் குடுத்துக் கொண்டிருந்தேன்.அதைப் பார்த்து இன்னும் சிலர் விசிலடிக்க சத்தம் கேட்டு நீங்கள் வந்துவிட்டீர்கள்.வந்ததும் எங்களை அழைத்து,”மியுசிக் கத்துக்கங்க டா பின்னாடி நல்லா வருவீங்க”என்றீர்கள்.அடித்திருக்கலாம் எங்களை.குறைந்தபட்சம் ஒரு போலி வசவாவது! இல்லை.ஆசைச் சாக்லேட்டை நான் கொஞ்ச நாள் விட்டதற்குக் காரணம் நீங்கள் தான்.

மேலே ஜன்னல் வலைகளில் எவ்வளவு ராக்கெட் அனுப்பியிருப்போம் என்ற கணக்கேயில்லை.அதைக் கண்டு நீங்கள் சொன்ன பதிலை இன்றளவும் என்னால் மறக்க முடியாது. ”நாசாவும் இஸ்ரோவும் உங்களைத் தான் தேடிக்கிட்டிருக்கு” என்றீர்கள்.அதற்குப் பிறகு அந்த ஜன்னல் வலைக்கு ஒரு ராக்கெட் கூட எங்களால் ஏவப்பட்டதில்லை.

ஒரு மனிதரால் எப்பொழுதும் இன்முகமாகவே இருக்க முடியுமா? எல்லா நேரங்களிலும் பொறுமையாக இருக்க முடியுமா? கனிவாகவே நேர்மறையாகப் பேச முடியுமா? என்ற வியப்பை எப்பொழுதும் நீங்கள் அளிக்கத் தவறியதேயில்லை.என் வாழ்வில் நான் பார்த்த முதல் ரோல் மாடலென்று உங்களைச் சொன்னால் கூட அது கொஞ்சமே கொஞ்சம் தான்.

நாடகம் போட எல்லாரையும் அழைத்தீர்கள் யாருமே வரவில்லை.உடனே நீங்களாக ஆளுக்கொரு வேடத்தைத் தந்தீர்கள்.பிசிராந்தையார் வேடத்தை என்னை ஏற்கச் செய்தீர்கள்.ஒத்திகை முடிந்து எல்லாப் பயல்களும் எல்லா வேடங்களையும் மாற்றி மாற்றி கிண்டலடித்துக் கொண்டார்கள்.என்னை ஒருத்தன் கிண்டலடித்ததற்காக அவனை அடிக்கச் சென்றேன். “டே அவரு எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா டே, பெருமைப் படனும்டே இப்டி உன்னை அவங்க கிண்டல் பண்றதுக்குக் கூட”என்றீர்கள்.

“கட்டடத்துக்குள்ள வெக்கை தான் வருது,வாங்க மரத்தடிக்குப் போகலாம்”என்று தேர்வெழுதும் நேரம் எல்லாம் மொத்த வகுப்பையும்  பெரிய வேப்ப மரத்தின் கீழ் அமர்த்தி விடுவீர்கள். “வேப்ப மரத்துக் காத்து சாச்சுப்புடும் , தூங்காம எழுதணும்..வேணும்னா புளிப்பு மிட்டாய் வாங்கிங்க” என்பீர்கள்.

அந்த நாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா தெரியவில்லை! என் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்திருக்கிறது.அந்த அறைக்குள் இருந்த இருபது மாணவர்களில் நானும் ஒருவனாகவே இருந்தேன்.நீங்கள் வைத்த போட்டி தான் காரணம்.யார் முதலில் பத்துக் குறள்களை எழுதுகிறார்கள் என்ற போட்டியில் கடைசியாக இருபதாவது ஆளாக நான் தேர்வாகியிருந்தேன்.

எல்லாருக்கும் ‘மெய்யறிவு காணுதல்’என்ற நூலொன்றைப் பரிசாக அளித்திருந்தீர்கள்.அந்த நூலைக் கையில்வாங்கிய உடன் அவ்வளவு மகிழ்வாக உணர்ந்தேன்.வீட்டுக்கு யார் வந்தாலும் “நான் வாங்குன பிரைஸ்”என்று அதைக் காட்டி பெருமையடித்துக் கொள்வேன்.

அதன் பிறகு வீடு வெள்ளையடிக்கும் ஒரு நாளில் அந்தப் புத்தகம் தொலைந்துவிட்டது.தொலைத்து விட்டேன்!ஒரு முறையேனும் அதை நான் படித்திருக்கலாம் போல.நீங்கள் குடுத்த புத்தகம் சாதரணமாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதை நான் ஏன் அன்றே அறியாமல் இருந்தேன் என்பது தெரியவில்லை.

உங்களால் மட்டும் தான் நான் தமிழார்வம் கொண்டிருக்கிறேன்.

அனைத்திற்கும் நன்றி!

- Selvakumar Sankaranarayanan