"அறிவில்லையா கொஞ்சம் கூட, எப்பப் பாரு சொல்லிக்கிட்டேஇருக்கனுமா? முடியில்லாம கொழம்ப வைக்க மாட்டியா?” அப்பா வழக்கம் போல அம்மாவைத் திட்டும் வார்த்தைகள் தான் இவை. எப்பொழுதாவது விழும் முடிக்காக எப்பொழுதும் வசவு வாங்கிப் பழக்கப்பட்டுப் போனது அம்மாவுக்கு.அடுத்த நான்கைந்து நாட்களுக்கும் இந்த வசவுகள் தொடரும்.ஒன்றும் செய்ய முடியாது அவளால்.
அப்பாவைப் பொருத்தமட்டில் இந்த உலகத்திலேயே அறிவில்லாத ஒரே ஆள் என் அம்மாதான்.அனுதினமும் “அறிவில்லையா”என்று ஆறேழு முறையேனும் பேச்சும் ஏச்சும் வாங்கி விடுவாள்.அது வாங்காத நாட்களே இல்லை எனலாம்.அதற்குப் பிறகு என்னையும் சமயங்களில் திட்டுவார்.எனக்கு அறிவில்லாமல் இருக்கக் காரணம் என் அம்மா வயிற்றில் நான் பிறந்தது என அவரே சொல்லிக் கொள்வார்.
அவ்வபொழுது அம்மா எதையாவது எழுதிக் கொண்டும் வாசித்துக் கொண்டும் இருப்பாள்.நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் அம்மாவுக்கு இருந்தது.அது அறவே பிடிக்காது அப்பாவுக்கு.”இதப் படிச்சு என்ன செய்யப் போற நீ? பக்கத்து நாட்டுச் சண்டையை நிருத்திடுவியா?” என்பார்.
அப்பாவுக்கு அம்மா தூரத்துக் சொந்தம்.ஒரு வகையில் அத்தை மகள் தான்.கலியாணம் கட்டி வந்த நாளிலிருந்து பிடிக்காமல் தான் அப்பா வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நான் வளர வளர பார்த்துத் தெரிந்து கொண்டேன்.
அம்மாவின் சமையல் அற்புதமாக இருக்கும்.என் நண்பர்களுக்கெல்லாம் கூட பிடித்தமானது அம்மாவின் சமையல்.பள்ளிக் கூடத்திற்குப் போகும் பொழுது ரெண்டு டிபன் பாக்ஸில் கட்டிக் கொடுப்பாள்.அவ்வளவு பாராட்டுகள் எப்பொழுதும் குவியும் அவளுக்கு.இருந்துமென்ன அப்பா ஒரு நாள் கூட ‘நல்லாருக்கு’என்று சொல்லாதது தான் குறை.
என்னைப் பொறுத்தவரையில் அவர் பாராட்டா விட்டாலும் சரி, அம்மாவைத் திட்டாமல் இருந்தாலே போதும் என்றிருந்தது.அம்மாவை எடுத்ததற்கு எல்லாம் குத்தம் சொல்வார்.அவருக்கு ஆபீஸில் லீவு கிடைக்காமல் போனாலோ, மேனஜர் அதிக வேலை வாங்கி விட்டாலோ அன்றைக்கு அம்மா தொலைந்தாள். “உன்னைக் கட்டின நேரம் எதுவும் உருப்பட மாட்டேங்குது”என்பார்.பதினைந்து வருடமாக இதே கதையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர்.பிறகெப்படிப் பதவி உயர்வு வந்தது? என்று கேட்க எனக்கு வாய் வரும்.எங்கே அடித்து விடுவாரோ என்ற பயத்தில் நான் எதுவும் கேட்க மாட்டேன்.
அம்மா நன்கு படித்திருந்தாள்.டிகிரி.அப்பாவை விட அதிகம்.ஆனால் தன்னை முட்டாளாகவே காட்டிக் கொள்வதில் அவ்வளவு ஒரு ஆசை அவளுக்கு.பள்ளிப்படிப்பைத் தாண்டாத அப்பாவுக்கு எங்கே அது கௌரவக் குறைச்சலாகப் போகுமோ என்று அவளுக்கு அவளே குடுத்துக் கொண்ட தண்டனை என்று கூடச் சொல்வேன்.இல்லாவிட்டால் கிடைத்தும் அரசாங்க வேலையை அப்பா சொன்னதற்காக வேண்டாம் என்று சொல்லியிருப்பாளா!
அப்பாவும் அரசாங்கத்தில் கிளார்க் வேலை தான் .அவருக்கு அரசாங்க வேலையென்றால் கொள்ளை ஆசை.ஆனால் அவர் மட்டுந்தான் அதைப் பார்க்க வேண்டும்.அவர் வேலையை அவரே பெருமையடித்துக் கொள்வார்.அவரால் தான் அந்த அலுவலகமே நடக்கிறது என்று அடிக்கடி நிறைய கதை பேசுவார்.பிடித்தாலும் இல்லாவிட்டாலும் ம்ம் கொட்டிக் கேட்பேன் நான்.பழகிவிட்டிருந்தது எனக்கு.
ஒரு நாள் இரவு அம்மா விடாமல் இருமிக் கொண்டே இருந்தாள்.வழக்கம் போலில்லாமல் இருமல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே எழுந்து உள்ளே பார்த்தேன்.அம்மாவால் எழுந்திரிக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள்.அப்பா வந்ததும் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போனோம்.எதோ நெஞ்சம் படபடத்துக் கொண்டது.
அம்மாவைப் பரிசோதித்துவிட்ட மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார்.இரண்டு நாட்கள் கடந்தது.எல்லாம் செய்து முடித்தும் மூளையில் கேன்சர் வந்திருப்பதாகச் சொன்னார்.இறுதிக் கட்டம் என்றும் கையை விரித்து விட்டார்.என் உலகமே இருண்டு போனதாக உணர்ந்தேன் நான்.
அப்பா அலுவலகத்தில் லீவை வாங்கிக் கொண்டு அம்மாவை கவனித்துக் கொண்டார்.அவள் மேல் உள்ள அக்கறையில் எல்லாம் இல்லை.அவளுக்கு எங்களைத் தவிர யாருமே இல்லை.நானும் பள்ளிக் கூடம் விட்டு உடனேயே ஓடி வந்துவிடுவேன்.அப்பொழுது தான் அப்பா குளிக்கச் செல்வார்.எங்களுக்கும் ஏதாவது சாப்பிட வாங்கிக் கொண்டு வருவார்.
“ட்ரீட்மென்ட் எதுவும் வேணாம் , வீட்டுக்கே போயிடலாம்” என்பாள் அம்மா.”ஏன் நான் செலவழிக்க முடியாம இருக்கேனா”என்று கடிந்து கொள்வார் அவர்.ஊரார் ஏதாவது பேசிவிடுவர்களாம் அது மட்டும் தான் அவருக்குக் கவலையாக இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அம்மா உருக்குலைந்து போவதை என் கண்களால் பார்க்க ஆரம்பித்தேன்.என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவளையும் அறியாமல் அவள் கண்களின் ஓரம் கண்ணீரை உதிர்த்துக் கொள்வாள்.நானும் அழுது விடக் கூடாதென அதை எதையும் வெளிக்காட்டாமல் இருக்கப் பார்ப்பாள்.
ஒரு நாள் வெள்ளிக்கிழமை மாலை இருக்கும்.பள்ளி விடுவதற்கு முன்பாகவே பக்கத்து வீட்டு மாமா சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.ஆம்! அம்மா எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டாள்.இனி நான் யாரை அம்மாவென்று அழைப்பேன் என்ற ஆதங்கத்தில் அழுது கொண்டே அவருடன் கிளம்பிச் சென்றேன்.
மருத்துவமனைக்குச் சென்று அவளைப் பார்க்கத் துடித்தேன்.கொஞ்ச நேரம் என்னை விடவே இல்லை.பிறகு ஒரு வழியாக அம்மாவை துணியைச் சுற்றிக் கொடுத்தார்கள்.வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போனோம்.அப்பாவின் உறவினர்கள் கொஞ்ச பேர் வந்திருந்தார்கள்.அதுவும் அம்மாவுக்காக.அப்பா எல்லாருடனும் சண்டை போட்டிருந்தார்.எல்லாக் காரியங்களும் முடிந்திருந்தது.அம்மாவை தீக்குக் கொடுத்துவிட்டு வந்த காட்சி கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.
நாட்கள் உருண்டோடியது.வெள்ளையடிக்க ஒதுங்க வைக்கும் பொழுது பொழுது அம்மா வழக்கமாக எழுதும் மேசைக்குப் பக்கத்தில் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்தார் அப்பா.அதில் நிறைய கவிதைகள் எழுதிய கடிதங்கள் இருந்தது.எல்லாவற்றையும் அப்பா படித்துக் கொண்டிருந்தார்.அவரையும் அறியாமல் கண்களில் கண்ணீர் பூத்திருந்தது.அதை வெளிக்காட்டாதவராக எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு என்னைக் கூட்டிக் கொண்டு நேராக போஸ்ட் ஆபிசுக்குப் போனார்.
எல்லாவற்றையும் உறைக்குள் போட்டு அம்மா பெயரை எழுதி , பின்னொட்டாக அவர் பெயரையும் எழுதி நான்கைந்து பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.
அந்த நாளைக்குப் பிறகிருந்து அப்பா என்னை ஒரு முறை கூட 'அறிவில்லையா’ என்று கேட்டதேயில்லை.
~ selvakumar sankaranarayanan
0 Comments