~ அவளுமில்லை
"அவ போய்ட்டா இனி அந்தப் பக்கம் என்ன வேலையுனக்கு" என்பாள் அம்மா.அவளிருந்த பொழுதும் சரி ,அவளில்லாத பொழுதும் சரி! என் கால்கள் அனிச்சையாய் அந்தத் திசையை நோக்கி நடந்துவிடும் அளவிற்குப் பழகியிருந்தேன்.
தாத்தா பாட்டிதான் இருக்கிறார்கள்
வீட்டுக்கு வரலாமென்பாள் சதுரங்கம் ஆடிவிட்டு வருவேன். வேண்டுமென்றே வெட்டுக் கொடுக்கும் பொழுது காய்களுக்கு விடுதலை கிடைப்பதாகவே உணர்வேன். ஆட்டமும் வேகமாக முடிந்து விடும் என்று நினைத்துக் கொள்வேன்.பொறுமை அவ்வளவுதான்.
கோடை விடுமுறை வந்தாலே குதூகலமாகவே இருக்கும்.
அவளும் நானும் சேர்ந்து மாமரங்களில் கல்லெறிவதுண்டு. ஒன்று கூட விழாது அது ஒரு கிளைக்கதை.சில நேரம் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது
"தொப்" பென்று கீழே தன்னால் விழும் மாங்காய்க்காக சண்டையிடுவோம்.
"ஓய் எங்கூட்டு மாங்கா... நான் தான் உனக்கு பங்கு தருவேன்" என்று அப்படியே பிடுங்கிக் கொள்வாள்.
கிடைக்கப் போகும் துண்டுக்காக மொத்தத்தையும் தந்துவிடுவேன் நான்.அப்படித்தான் வளர்ந்துமிருந்தேன்.அவ்வளவு தான் நான்.பிடுங்கப் போகும் சண்டையில் கீழே அவளோ, நானோ விழுந்து மண்டை உடைந்து....எக்ஸ்ரே , ஸ்கேன் என எல்லை கடந்து எங்கோ யோசிப்பதும் அதற்கொரு காரணமாக இருக்கலாம்.
மாட்டை அங்கே கட்டிப் போட்டிருக்கிறார்கள், ஆட்டை அங்கே தட்டி கட்டி அடைத்திருக்கிறார்கள்.ட்ராக்டர் நின்றும் பார்த்திருக்கிறேன்.பின் எல்லாம் விற்றும் விட்டார்கள்.வீட்டின் முன் விருட்சம் போல மாமரம் படர்ந்திருந்தது.மாமரத்தான் வீடு என்றால் ஊருக்கே புகழ்.
அவ்வபொழுது அவள் அம்மா நான்கைந்து மாங்காய்களை மஞ்சப்பைக்குள் திணித்துக் கொடுத்து " அம்மாட்ட சொல்லி ஊறுகா போடச்சொல்லுடா" என்பாள்.மாங்காயா? தேங்காயா என்றிருக்கும் அது.பை கொள்ளாமல் எப்பொழுது அறுந்து விழுமோ என்று கணமாயிருக்கும்.
ஒரு நாள் அவள் வீட்டுக்குச் செல்லும் பொழுது தான் வீட்டை விற்கப் போவதைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.அந்த வீட்டை வாங்கியவர்கள் இடித்து ஏதோ கல்யாண மண்டபம் கட்டப்போவதாகவும் சொன்னார்கள்.எனக்கு வருத்தமாக இருந்தது.
சரியாக ஒரு மாதத்தில் அந்த வீடு கை மாறியது.அவளும் கூண்டோடு நகரம் பெயர்ந்தாள்.அந்த வீடு இடிக்கப்பட்டு கட்டுமானம் நடைபெற ஆரம்பித்தது.வீட்டிற்கு முன் பெரிய தகரம் வைத்து அடைத்திருந்தார்கள்.
ஆறு மாதம் அந்த வழியாக எப்பொழுது சென்றாலும் மணல், சிமெண்ட் புழுதியாகத்தான் இருக்கும்.ஒரு வழியாக கட்டுமானம் முடிந்திருந்தது.கல்யாண மண்டபமெல்லாம் இல்லை.வீடு தான் கட்டியிருந்தார்கள்.இரண்டு பக்கமும் படி வைத்து ஏறும் சினிமாவில் காண்பதைப் போலொரு வீடு.அழகாக இருந்தது.வீட்டிற்கு மாமரம் இலட்சணமா இல்லை மரத்திற்கு வீடு இலட்சணமா என்று அழகே உருவாயிருந்தது.ஆனால் பெரிய காம்பவுண்ட் சுவர்.
அந்த வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த இடத்தில் தான் கிரிக்கெட் விளையாடுவோம்.ஒவ்வொரு முறை பந்து அந்தக் காம்பவுண்டுக்குள் போகும் பொழுது நான் தான் உள்ளே போய் கேட்டு பந்தை வாங்கிக் கொண்டு வருவேன்.எத்தனை முறை சென்றாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.ஒரு பெரியவரைத் தவிர வீட்டில் யார் இருக்கிறார்கள் என்ற எந்தத் தடயமும் தெரியாது.பரணில் இருக்கும் குருவிக்கூட்டைப் போல் மனிதர்களின் கீச்சொலி கேட்கும்.
ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை பந்து உள்ளே விழும்.எடுக்கச் செல்வேன்.நான் அடித்தாலும் நான் தான் எடுக்கச் செல்வேன்.யார் அடித்தாலும் நான் தான் எடுக்கச் செல்வேன். அதை மட்டும் விட்டுக் கொடுத்ததேயில்லை.அவளிருந்த பொழுதும் அப்படித்தான்..அவளில்லாத பொழுதும் அப்படித்தான்.
மரத்தை நான் தொடாத நாளே இருந்ததில்லை.
~ Selvakumar Sankaranarayanan
3 Comments
கபடம் இல்லாத நாட்களை சில நொடிகள் மனதில் அசை போட நேர்ந்தது. அழகான எழுத்து. 👌
ReplyDeleteBeautiful
ReplyDeleteBeautiful
ReplyDelete