சமீபமாக சென்னையில் புயல் எச்சரிக்கை விடப்பட்ட பொழுது மக்களுக்கு பழைய வெள்ளத்தின் கோர முகம் தான் கண் முன் வந்து போயிருக்கும்.எனவே தான் அவர்கள் நான்கு சக்கர வாகனங்களை வேளச்சேரி பாலத்தின் மேல் வரிசையாக நிற்க வைக்க ஆரம்பித்தார்கள்.

அதுவும் போக மளிகை சாமான்களில் இருந்து பலதரப்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வீடுகளில் மக்கள் வாங்கிச் சேமித்துக் கொண்டார்கள்.இதுவும் கூட கடந்த கால வெள்ளத்தில் அவர்கள் கற்றுக் கொண்ட பாடத்தின் விளைவு தான்.

இதையெல்லாம் சமூக வலைதளமான பேஸ்புக்கில் நிறைய பேர் பகடி செய்துகொண்டிருந்தார்கள்.எங்கள் ஊருக்கு எந்தப் பிரச்சனையும் இலை.நாங்கள் எல்லாம் குடுத்து வைத்தவர்கள் என்பதைப் போல பேசிக் கொண்டிருந்தார்கள்.இன்னும் சிலர் “ஏரில வீடு கட்டினா அப்படித்தான் நடக்கும்” என்று சூழ்நிலை தெரியாமல் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.ஏரியில் வீடு கட்டியது தவறு தான் என்றாலும் அதையே இன்னும் எத்தனை காலத்திற்குச் சொல்லிக் காண்பித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்.மாறாக குளத்திலும்,ஏரியிலும் பட்டாக்களை வாங்கி அடுக்கு மாடி கட்டியிருப்பவர்கள் எல்லாரும் யார்? சென்னையின் பூர்வகுடிகளா?இல்லை. இப்பொழுது சென்னையை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்களே தமிழகத்தின் பிறபகுதி மக்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தான்.

தொழிலுக்காக,வேலைக்காக பிழைப்பைத் தேடி தலை நகரைத் தேடி வந்த மக்களால் தான் சென்னை மாநகரம் பிதுங்கி வழிகிறது.அப்படி வருபவர்களுக்காக இருப்பிடத் தேவை என்பது இன்றியமையாத ஒன்று.அதைப் பரிசீலிக்கும் நிலைமையில் அன்று அரசாங்கம் இருந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இரண்டு திராவிடக் கட்சிகளும் தான் நீர் நிலைகளை அன்று மக்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.அதில் நான் எந்த மாற்றுக் கருத்துக்கும் வரவில்லை.அதே நேரத்தில் இதை நான் ஆதரிக்கவும் இல்லை.ஆனால் என்றைக்கோ நடந்ததற்கு இன்றைக்கு மக்களை அதையே சொல்லிச் சொல்லி எள்ளி நகையாடுதல் என்பது ஒருவித மென் குரூரத்தை தான் காண்பிக்கிறது.

சென்னை மழைக்கு கொஞ்சம் இணையாக இல்லாவிட்டாலும் சமீபத்தில் நல்ல மழையைக் கண்டவை கோவையும்,மதுரையும்.இரண்டு ஊர்களிலும் கடல் கிடையாது.சென்னையைப் போல நீர் நிலைகளில் ஆக்கிரமித்து எல்லாம் வீடுகள் கட்டப்படவில்லை.ஆனாலும் பெரிதாக பாதிப்பு எங்கே ஏற்பட்டது? தரையடிப் பாலங்களில் தான்.தண்ணீரின் இயல்பு பள்ளத்தை நோக்கி ஓடுவது தான்.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.

கடல் மட்டத்தில் இருந்து சில மீட்டர் உயரமிருக்கும் நகரங்களிலேயே மழை நீர்த்தேக்கமாகி வடிய சிரமப்படும் பொழுது, கடல் நீர் மட்டத்தில் இருக்கும் ஒரு பெரு நகரம் அதுவும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பெருகி வழியும் நகரம் ஒரு நாள் மழை நீரில் சூழ்ந்து நின்றால் அதற்குள் அத்தனை கேலிப் பேச்சுகள் ,அத்தனை கிண்டல்கள்.

இன்னொரு முக்கியமான விடயத்தை நான் இங்கே பதிவு செய்ய வேண்டும்.மழை நீர் வடிகால் அமைப்பு என்ற வார்த்தையின் அர்த்தமே பாதி ஆட்களுக்குப் புரிவதாகயில்லை.மழை நீரானது சரியான முறையில் வடிந்து அதற்கான பாதையில் ஓடி நீர் தேங்காமல் இருப்பதை வடிகால் அமைப்பு என்று எளிமையாகப் புரிந்து கொள்ளுங்கள். அடுத்து உங்களுக்குள் ஒரு கேள்வி வரும்.பிறகு ஏன் சென்னையில் அவ்வளவு மழை நீர் தேக்கம் என்று? ஒரு வருடத்திற்கான மொத்த மழையும் ஒரே நாளில் கொட்டித் தீர்த்தால் எந்த வடிகால் அமைப்பும் பலன் தராது. அதுவும் நாம் கொஞ்ச நஞ்சக் குப்பைகளையா போட்டு வைத்திருக்கிறோம்! அத்தனையும் நெகிழிப் பைகள்.பிறகு எப்படி ஒரு வருடத்திற்கான மழை நீர் அனைத்தும் ஒரே நாள் இரவில் வடிந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நாம் வீட்டில் குளிக்கும் பொழுது அவசர அவசரமாக ஊற்றும் தண்ணீரே வெளியேற அத்தனை நேரம் எடுத்துக் கொள்கிறது.பெரு வெள்ளத்தை எல்லாம் நாம் அசால்டாக,”இன்னும் என்ன தண்ணீர் போகாமல் இருக்கு”என்று வேடிக்கையாகச் சொல்லி விடுகிறோம்.நாம் நினைப்பதைப் போல எதுவும் அவ்வளவு துரிதமாக எல்லாம் நடந்துவிடாது.

கடந்த  தூத்துக்குடி வெள்ளத்தை யாருமே மறக்க முடியாது.நான் அங்கே ஒரு வாரம் தங்கி பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.நகரம் மொத்தமும் நீரில் மூழ்கிக் கிடந்தது.அதைச் சுற்றியிருந்த கிராமங்களிலும் அவ்வளவு மழை கொட்டித் தீர்த்திருந்தது.அங்கே எந்த நீர் நிலைகளில் வீடுகள் கட்டியிருந்தார்கள்? அது எதுவும் இல்லை.ஒரே ஒரு காரணம் தான், கடல் நீர் மட்டம். அந்தக் கடலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் பொழுது இந்த நீரெல்லாம் எங்கே போய் கலக்கும்.இல்லை அங்கே வடிகால் அமைப்பு எதுவும் குறையாக இருந்ததா என்றால் அப்படியொன்றும் இல்லை.நன்றாகத்தான் இருந்தது.ஆனாலும் இயற்கையின் சக்தியை நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.நாம் எவ்வளவு தர்க்கங்கள் வைத்தாலும்,விவாதம் செய்தாலும் இது தான் உண்மை.

சரி இனி என்ன செய்யலாம்?

இருக்கும் நீர் நிலைகளைத் தூர் வாரி சரி செய்யலாம்.இனிமேல் நீர் நிலைகளை குடியிருப்புகளுக்கு ஒதுக்காமல் இருக்க வேண்டும்.மற்றும் நீர் நிலைகள் சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.அதே போல மக்களும் இனிமேல் இடம் வாங்கும் பொழுது அது நீர்பிடிப்புப் பகுதியா? அல்லது நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும் பகுதியா? என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து வாங்கிட வேண்டும்.

நீர் நிலைகளில் குடியிருப்புகள் கட்ட அரசு அனுமதி  கொடுக்கிறது என்று நாம் கொந்தளித்து விட்டு, நாம் தான் அங்கே மனைகள் வாங்கி வீடுகளையும் கட்டுகிறோம்.

மாற்றம் நம்மில் இருந்து தான் முதலில் ஆரம்பிக்க வேண்டும்.